பினாங்கில் ரிம200 மில்லியன் மதிப்பிலான AI சார்ந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு முதலீடு விரைவில் தொடங்கப்படும் – ஜக்தீப்

Admin
jagdeep

ஜார்ச்டவுன் – பினாங்கு – அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஹெல்த்கேர் டிரையாங்கிள் இன்க். (Healthcare Triangle Inc.) நிறுவனத்தின் துணை நிறுவனமான குவாண்டம் நெக்ஸஸ் (Quantum Nexus), பினாங்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகத் தரத்திலான சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தை அமைக்க ரிம150 மில்லியன் முதல் ரிம200 மில்லியன் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை Healthcare Triangle நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ், பினாங்கு இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ உடனான செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் இதனை அறிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் பினாங்கு மாநிலம் தொழில்துறை, மருத்துவத் தொழில்நுட்பம் (MedTech) மற்றும் உயர் தொழில்நுட்ப முதலீடுகளுக்கான முக்கிய மையமாக திகழ்கிறது, என்றார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆற்றல் பினாங்கிற்கு இருப்பதாக அவர் கூறினார்.

“சுகாதாரம், நல்வாழ்வு மற்றும் AI தொழில்நுட்பம் ஆகியவை பினாங்கின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய துறைகளாகும். இந்த முதலீடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கும் பெரும் பங்களிப்பை வழங்குகிறது ,” என்றார்.

டாக்டர் சுரேஷ் பேசுகையில், புற்றுநோய் சிகிச்சைக்குப் பிந்தைய மீளுருவாக்கம், எலும்பியல் சிகிச்சைகள், மனநல பராமரிப்பு மற்றும் AI சார்ந்த ஆரோக்கிய சேவைகளை ஒருங்கிணைக்கும் உயர்தர நல்வாழ்வு மையத்தை பினாங்கில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் முழுமையான நல்வாழ்வு சூழலமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். மருத்துவ சுற்றுலா துறையில் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் பினாங்கு, இந்தத் திட்டத்திற்கான சிறந்த இடமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

உலகளவில் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ள Healthcare Triangle நிறுவனம், அமெரிக்கா, ஸ்பெயின், துபாய், இந்தியா மற்றும் மலேசியாவில் தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது.

இதனிடையே, மருத்துவ நிபுணர் டாக்டர் பாலாசந்திரன், AI தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்கால மருத்துவத் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். பல நீண்டகால நோய்களுக்கு மேம்பட்ட தீர்வுகளை வழங்கும் திறன் இந்த தொழில்நுட்பத்திற்கு இருப்பதாக அவர் கூறினார்.

டாக்டர் லோகன் பேசுகையில், இந்த முதலீடு மருத்துவத் துறையைத் தாண்டி உணவு மற்றும் பானத் துறை, சில்லறை வணிகம் மற்றும் சேவைத் துறைகளிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், பினாங்கை ஆசியாவின் முன்னணி சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களில் ஒன்றாக உருமாற்றம் காணும் என நம்பிக்கை தெரிவித்தார்.