டிஜியின் தீபாவளி கலக்கல் கொண்டாட்டம்

‘தீமைகள் நீங்கும் தீபத் திருநாளாம்

நன்மைகள் ஓங்கும் நம்பிக்கைப் பெருநாளாம்

மகிழ்ச்சி தோன்றும் மங்களத் திருநாளாம்

பல்லினம் போற்றும் பண்பாட்டுப் பெருநாளாம்’

 

மலேசிய நாட்டின் முதன்மை பெருநாட்களில் ஒன்றான தீபாவளித் திருநாள் அண்மையில் அனைத்து மலேசிய இந்தியர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பினாங்கு வாழ் இந்தியர்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் டிஜி தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாநில அரசின் ஆதரவோடு கடந்த நவம்பர் 10-ஆம் திகதி பினாங்கு குட்டி இந்தியாவில் தீபாவளி கலக்கல் கொண்டாட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.

கனத்த மழைக்கு இடையே பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்களின் வருகை அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இத்தீபாவளி கொண்டாட்டத்தைப் பினாங்கு முதல்வர் உயர்திரு லிம் குவான் எங், பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, டிஜி தொலைத்தொடர்பு நிறுவன விற்பனைத் தலைவர் சாங் நாம் கியோங், பினாங்கு இந்திய வர்த்தகர் மற்றும் தொழியியல் சங்கத் தலைவர் திரு வசந்தராஜன் ஆகியோர் இணைந்து இந்தியர்களின் பாரம்பரியச் சின்னமான குத்து விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டத்தை மங்களகரமாகத் தொடக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் திரு இலட்சுமணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சீனம், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வந்திருந்தவர்களை வரவேற்றுத் தன் பேச்சுத் திறத்தால் அனைவரையும் கவர்ந்திழுத்தார்.

முதல் அங்கமாக, 2011-ஆம் ஆண்டின் அவதாரம் ஆரம்பம் நடனப் போட்டியின் வெற்றியாளர் கிலேக்சி நடனக் குழுவின் கண்கவர் நடனப்படைப்பு அரங்கேறியது. பரதம், கோலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பங்கரா ஆட்டம் ஆகிய கலவையில் வண்ணமயமாகத் திகழ்ந்த அந்நடனம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. பினாங்கு மக்கள் கூட்டணி அரசின் ஆதரவுடன் நடைபெற்ற இத்தீபாவளி கொண்டாட்டத்தில் மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் திரளாக வந்திருந்தனர். அதற்கேற்றவாறு, அங்கு அகன்ற கூடாரமும் அமைக்கப்பட்டிருந்ததால் மக்கள் கூடாரத்தினுள் அமர்ந்து வசதியாக நிகழ்ச்சியினைக் கண்டுகளிக்க ஏதுவாக அமைந்தது.

நிகழ்ச்சியில், வரவேற்புரையாற்றிய டிஜி தொலைத் தொடர்பு நிறுவன விற்பனைத் தலைவர் திரு சாங், டிஜியின் தீபாவளி கலக்கல் கொண்டாட்டத்தை ஆறாவது முறையாக ஏற்று நடத்துவதில் மிகுந்த பெருமை கொள்வதாகக் கூறினார். ஈடு இணையில்லா ஆதரவு நல்கிய பினாங்கு மாநில அரசுக்கு டிஜி சார்பில் தன் நன்றியினையும் பினாங்கு வாழ் இந்தியர்களுக்குத் தன் தீபாவளி நல்வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார். மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ்ச் செயல்படும் பினாங்கு மாநில அரசு இந்திய மக்களின் தேவையை ஒரு போதும் புறக்கணித்ததில்லை என்று பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி தன் உரையில் வலியுறுத்திக் கூறினார். தமிழ்ப்பள்ளிகளுக்கும் கோவில்களுக்கும் நிலம், அரசாங்கத் துறை, பினாங்கு நகராண்மைக் கழகம், பினாங்கு செபெராங் பிறை நகராண்மைக் கழகம், பினாங்கு நீர் விநியோக மன்றம், பினாங்கு மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு, அடிப்படை உரிமைகள் இவையனைத்தையும் வழங்கி மாநில அரசு இந்தியர்களுக்குப் பல சேவைகளைச் செய்து வருகிறது என்பது வெள்ளிடைமலையாகும் என்றார். பினாங்கு மக்கள் இத்தீபத் திருநாளை அன்பு உறவுகளோடு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட தம் வாழ்த்தினையும் பரிமாறிக் கொண்டார்.

பினாங்கு மாநிலத்தை ஐந்து ஆண்டு காலம் ஆட்சி புரிந்து வரும் மக்கள் கூட்டணி அரசு மக்கள் நலனை முன்னிறுத்தியே பல ஆக்ககரமான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதற்கு உடனடித் தீர்வு காண்பதே எங்கள் தலையாய கடமை என்று சிறப்புரையாற்றிய பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் கூறினார். மக்கள் கூட்டணி அரசான நாங்கள் என்றும் ‘மக்கள் அரசாங்கம்’ என்பதை வலியுறுத்திக் கூறினார். இது போன்ற பெருநாள் கொண்டாட்டங்கள் பல்லின மக்களை ஒன்றுபடுத்தி நல்லிணக்கத்தை ஓங்கச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தீபாவளிப் பெருநாளை கொண்டாடும் அனைத்து இந்தியர்களும் தீபத் திருநாளை ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் கொண்டாட தன் இனிய வாழ்த்துகளைக் கூறிக் கொண்டார். டிஜியின் தீபாவளி கொண்டாட்டம். பல அற்புதமான மேடை படைப்புகளுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

535531_548352105182244_635064041_n

திரு வசந்தராஜன், டத்தோ அப்துல் மாலிக், திரு சாங் நாம் கியோங், முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங், பேராசிரியர் இராமசாமி, திரு. தனசேகரன், திரு லிம் ஹொக் செங்  ( இடமிருந்து வலம் )