தடுப்பூசி எடுப்பது  கட்டாயமாக்க மக்கள் ஆதரவு!!

Admin

மத்திய அரசாங்கம் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான இலக்கை துரிதப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு மலேசியருக்கும் கோவிட்-19 தடுப்பூசி எடுப்பது  கட்டாயமாக்க வேண்டும்  என்ற  வதந்திகள்  மற்றும் கருத்துகள் மீண்டும் எழுந்துள்ளன.

முன்னதாக, உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட ஓர் அறிக்கையில், உலக சுகாதார நிறுவனங்கள் கோவிட்-19 தடுப்பூசி போடுவதை கட்டாயப்படுத்துவதைக் காட்டிலும், இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பொதுக் கல்வி புகட்ட வேண்டும். இந்த அணுகுமுறையை ஒவ்வொரு நாடும் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகின்றனர். 

முத்துச்செய்திகள் நாளிதழ் குழுவினர் பொது மக்களிடம் கோவிட்-19 தடுப்பூசி போடுவதை கட்டாயப்படுத்த வேண்டுமா? என்ற கருத்து கணிப்பில் ஈடுப்பட்டனர். 

க.லோகினி, 18
மத்திய அரசாங்கம் கோவிட்-19 போடுவதை கட்டயாமாக்க வேண்டும் என மாணவி க.லோகினி,18 கூறினார். 

“இத்திட்டம் அமலுக்கு வந்தால்  கோவிட்-19 வழக்கு பதிவுகளை கணிசமான முறையில் குறைக்க முடியும்.

“இதன் மூலம் மாணவர்கள் இயங்கலை கல்வி கற்காமல் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று நேரடி கற்றல் கற்பித்தலை படிக்கலாம். இயங்கலை கல்வி முறை மிகுந்த சவாலாக அமைகிறது,” என்றார். 

தற்போதைய சூழ்நிலை புதிய இயல்பு நிலையில் இருந்து வழக்கமான இயல்பிற்கு மாற வேண்டும்.

கூடிய விரைவில் தொடரவிற்கும் மேற்கல்வியை சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிலையத்தில் நேரடி கல்வி கற்க விருப்பம் கொள்வதாக கூறினார். 

குணசுந்தரி,46
குழந்தை பராமரிப்பு காப்பகத்தில் பணிபுரியும் குணசுந்தரி,46 மத்திய அரசாங்கம் கோவிட்-19 தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என கூறினார். கோவிட்-19 புதிய வழக்கு பதிவுகள் தொடர்ந்து அதிகரிப்பதை தவிர்க்க இது அவசியம் என தனது கருத்தை முன் வைத்தார். 

“இத்திட்டத்தை  செயல்டுத்த இன்னும் கால தாமதமாக வில்லை. எனவே, மத்திய அரசு இது குறித்து ஆலோசிக்க வேண்டும், என்றார்.  

“இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதன் மூலம் பொது மக்களின் மன ஆரோக்கியம் மற்றும் அவர்களின் வேலை பாதுகாக்கப்படும்,” என கூறினார். 

இரா. சோமசுந்தரம்,69
முன்னாள் இரப்பர் தோட்ட மேலாளராக பணிபுரிந்த இரா. சோமசுந்தரம்,69 கோவிட்-19 தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்குவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. 

“தடுப்பூசி போடுவது ஒரு தனி நபர் சுய விருப்பத்தை சேர்ந்தது. எனவே, இத்திட்டத்தை கட்டாயமாக்குவது முறை அல்ல. 

“ஏனெனில், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மருத்துவ சிக்கல் அல்லது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது, என்றார். 


ஐயப்பன் பப்பு பிள்ளை
பி.டி.சி தொலைத்தொடர்பு சேவை சென் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி. ஐயப்பன் பப்பு பிள்ளை, கோவிட் -19 நோய்த்தொற்று மேலும் பெருமளவில் பரவாமல் தடுக்க தடுப்பூசி கட்டாயமாக்கப்பட வேண்டும், என்றார்.

“நான் ஏற்கனவே எனது முதல் டோஸ் பெற்றுள்ளேன்.  அடுத்த வாரம் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற காத்திருக்கிறேன். 

இத்திட்டத்தை கட்டாயமாக்கப்படுவதற்கு நிச்சயமாக அளிக்கிறேன்.

“நமது நாட்டில் கோவிட்-19 வழக்கு பதிவுகள் இரண்டு இலக்கில் பதிவாகி நீண்ட காலமாகிவிட்டது.  இப்போது, ​​ஒரு நாளைக்கு நான்கு இலக்க வழக்குகள் எளிதில் பதிவு செய்யப்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 

தற்போதைய சூழலில் தடுப்பூசி போடுவதே சிறந்த தேர்வாகும், என கூறினார்.