தண்ணீர்மலைக் கோவிலுக்குத் திருக்குளம் நிர்மாணிப்பு நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலைய நிர்வாகம் ரிம 1 இலட்சம் நன்கொடை

Admin

459846_464634976908100_1571971599_o

பினாங்கு இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய நிர்வாகத்தினரிடமிருந்து ரிம100,000க்கான காசோலையைப் பெற்றுக் கொள்கிறார். அவர் அருகில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் திரு குவனராஜூ மற்றும் உறுப்பினர்.

தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலய வளாகத்தில் திருக்குளம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதை முன்னிட்டு பினாங்கு நாட்டுக் கோட்டை ஆலய அறங்காவலர்கள் ரிம 1 இலட்சம் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். தண்ணீர்மலை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரிய பணிமனையில் நடைபெற்ற நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் அதன் தலைவரும் மாநில இரண்டாம் துணை முதல்வருமான மதிப்பிற்குரிய பேராசிரியர் ப.இராமசாமி நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய அறங்காவலர்களான டத்தோ என். இராமநாதன், டாக்டர் நாராயணன் மற்றும் பல அறங்காவலர்களிடமிருந்து ஒரு இலட்சத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டார்.

மனங்கவரும் பினாங்குத் தீவில் ஏறக்குறைய ஒரு கோடி  பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் தண்ணீர் மலை பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும், உள்ளூர் பொது மக்களும் வந்து தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வழிபட்டுப் பிரமித்துவரும் இவ்வேளையில், இந்த ஆலய வளாகத்தில் புதிய அம்சம் ஒன்று சேர்க்க அழகிய திருக்குளம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஆலய நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளதாகப் பினாங்கு தண்ணீர்மலை ஆலயத் தலைவர் குவனராஜு அறிவித்தார்.

பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்திற்குப் பினாங்கு நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய அறங்காவலர்கள் ஒரு இலட்சம் வெள்ளி வழங்கியிருப்பது இவர்களின் சமூகக் கடப்பாட்டைக் காட்டுவதாகக் காசோலையைப் பெற்றுக்கொண்ட பேராசிரியர்         ப.இராமசாமி கூறினார். இன்னும் ஒரு சில மாதங்களில் திறந்த விலை ஒப்பந்தம் வழி ஆலயத்திதின் மேற்தளத்திற்கு எளிதாகவும் வசதியாகவும் செல்வதற்கு வடஊர்திச் சேவையும் ஏற்படுத்தித் தரப்படவுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்டார். அப்பணி நிறைவடைந்ததும் பொது மக்கள் 514 படிகளைக் கடந்து செல்லும் சிரமமின்றி சரவணக் குகனை நிம்மதியாகச் சென்று வழிபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலயக் கட்டுமானப் பணிகள் முழுவதுமாக நிறைவுப்பெற்றுள்ள நிலையில், ஆலயத்தின் அருகில் மடப்பள்ளி கட்டுமானப்பணிகளுடன் ஆலய மண்டபத்திற்கான பணிகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகின்றன என்று விளக்கமளித்ததுடன் இவ்வேலைகள் நிறைவடைந்தவுடன் சிற்பக்கலை நிபுணர்களை அழைத்து திருக்குளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றும் ஆலயத் தலைவர் திரு.குவனராஜு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இவ்வாலய வளாகத்தில் இன்னும் பல அற்புதமான நிர்மாணிப்புகள் உருவாக்கப்படுவதன் வழி அனைத்துலக அளவில் புகழ்மிக்க சுற்றுலாத்தளமாகவும் தமிழர்கள் வழிபாடு செய்யும் மிகப் பெரிய முருகன் ஆலயமாகவும் பினாங்கு தண்ணீர்மலை பால தண்டாயுதபாணி ஆலயம் திகழும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவரும் இரண்டாம் துணை முதல்வருமான  பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார்.