தமிழ்ப்பள்ளிகளில் சமயக் கல்வி போதிப்பது அவசியம் – சுந்தராஜு

img 20240422 wa0006

 

பிறை – ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம், மலேசிய இந்துதர்ம மாமன்றம் தேசிய சமயக்கல்வி உபக்குழு, மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் ஏற்பாட்டில் 8-வது முறையாக அடிப்படை இந்துதர்ம ஆசிரியர் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பயிலரங்கம் ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய மண்டபத்தில் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றன .

 

இந்த பயிலரங்க நிறைவு விழாவின் போது பினாங்கு வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு; மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் இராதகிருஷ்ணன்; மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் மாநிலத் தலைவர் ந.தனபாலன்; பிறை, ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய அறங்காவலர் டத்தோ ஶ்ரீ கோபாலகிருஷ்ணன்: ஆலயத் தலைவர் மேஜர் சேகரன்; பினாங்கு ம.இ.க தலைவர் டத்தோ தினகரன்; மாமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .

 

மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் இராதகிருஷ்ணன் தலைமையில் ஆறு இந்து சமய போதகர்கள் இந்து சமயப் போதனைகளின் அடிப்படைப் பயிற்சிகளை வழங்கி பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டினர்.

 

பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள 28 தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமய அடிப்படையிலான பாடப் போதனை வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்திருப்பதாகவும், இம்முறை ஆசிரியர்கள் மட்டுமின்றி பொது மக்கள், இல்லதரசிகள், புதிய ஆசிரியர்கள் என 40 பேர் பங்கேற்றதாகவும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டு குழுத் தலைவருமான இராஜமாணிக்கம் கூறினார் .

 

2015 ஆண்டு தொடங்கி இந்த சமயப் போதனை பயிலரங்கம் மேற்கொண்டு வருவதாகவும் ஆசிரியர்களுக்கான ஊதியமும் 2016ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு தொடங்கி மித்ரா, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் இணை ஆதரவில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

 

இந்த ஆலயம் மக்களுக்கு சேவை மையமாகவும் திகழ்வதாக அதன் ஆலயத் தலைவர் மேஜர் சேகரன் கூறினார். பல சமூக சேவைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பாக கல்வி, சமூக நலன் திட்டங்கள் வழிநடத்துவதாகக் கூறினார்.

“தமிழ்ப்பள்ளிகளில் இந்து மதப் போதனை போதிக்கும் அடிப்படைப் பாட புத்தகங்களை மலேசிய இந்துதர்ம மாமன்றம் தயாரித்துள்ளது. மேலும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களுக்குப் போதிப்பதாக,” மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் பினாங்கு அருள்நிலையத் தலைவர் ந. தனபாலன் கூறினார்.

 

இந்து மதப் போதனைகள் 1,2,3,4 மற்றும் 5 ஆம் ஆண்டு பயிலும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்ப்பள்ளிகளில் நடத்தப்படுகிறது.

 

ஆண்டுதோறும் ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய ஏற்பாட்டில் சமய அடிப்படையிலான புதிர் போட்டிகளும் தமிழ்ப்பள்ளிகளிடையே ஏற்று நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார் .

 

சிறப்புரையாற்றிய ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தமிழ்ப்பள்ளிகளில் சமயக் கல்வி போதனை மேற்கொள்வதை வரவேற்றார். இதனை எட்டாவது ஆண்டாக நடத்திவரும் பினாங்கு இந்துதர்ம மாமன்றத்திற்கு அவரின் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

 

மேலும், இந்துதர்ம மாமன்றம் போன்ற அரசு சாரா இயக்கங்களை அங்கீகரிக்கவும் இந்தியச் சமுதாயத்திற்கு மேலும் பல பயனுள்ள திட்டங்களை மேற்கொள்ளவும் தேசிய இந்துதர்ம மாமன்ற அருள்நிலையத்திற்கு ரிம10,000-ஐ சுந்தராஜு எடுத்து வழங்கினார்.

 

நமது சமூகத்தின் முன்னேற்றத்தை நோக்கி அரசு சாரா இயக்கங்கள் செயல் பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் மலேசிய இந்துதர்ம மாமன்றம் சிறந்த சேவையாற்றி வருவதாகவும், மாணவர்கள் அடிப்படை சமயப் போதனையை ஆரம்பத்திலேயே கற்றுக் கொடுக்க எடுக்கும் முன்முயற்சிகளும் பாராட்டக்குரியதாகும். இந்த முயற்சி வருங்காலத்திலும் தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார் .

 

தொடர்ந்து, பிறை ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் வாகனம் நிறுத்துமிட திட்டத்தினை விரைவில் செயல்படுத்த சம்மந்தப்பட்ட துறைகளிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தினை வெற்றியடைய தம்மால் இயன்ற உதவிகளை நல்கவிருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

img 20240422 wa0007