தாமான் கலிடோனியா இண்டா உரிமையாளர்கள் குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு

Admin

ஜாவி – கலிடோனியா தோட்ட மக்கள் சொந்த வீடு பெற வேண்டும் என்ற 40 ஆண்டுக்கால எதிர்ப்பார்ப்பு இன்று நிறைவேற்றப்படுகிறது. மாநில அரசுக்கு சொந்தமான 15.106 ஏக்கர் நிலப்பரப்பில் தாமான் கலிடோனியா இண்டா எனும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட 272 வீடுகள் கட்டப்படுகிறது.

இத்திட்டம் இரண்டு பிரிவாக மேம்பாடுக் காண்கிறது. முதல் பிரிவில் 112 வீடுகளும் இரண்டாம் பிரிவில் 160 வீடுகளும் கட்டப்படும்.

“பினாங்கு மாநில அரசாங்கம் அளித்த வாக்குறுதி Eco World மேம்பாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நிர்ணயிக்கப்பட்ட காலவரையறை விட சீக்கிரமாக முதல் பிரிவு வீடமைப்புத் திட்டம் நிறைவுக்கண்டது,” என
மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தலைமையில் தாமான் கலிடோனியா இண்டாவில் முதல் பிரிவுக்கான வீட்டு உரிமையாளர்கள் குலுக்கல் முறையில் வீட்டைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்தார்.

எனவே, மாநில அரசு எதிர்காலத்தில் கலிடோனியா இண்டா வீடமைப்புத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிறுவப்படும் என பேராசிரியர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

முதல் பிரிவில் வீடுகள் பெறாதவர்கள் இரண்டாம் பிரிவு வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு பேராசிரியர் கேட்டுக்கொண்டார். இத்தோட்டத்தின் முன்னாள் குடிமக்கள் மற்றும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

“இந்த வீடமைப்புத் திட்டத்தில் அமைக்கப்படும் வீடுகள் கலிடோனியா தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இந்தச் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பி40 பொது மக்களுக்கும் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

“பொது மக்கள் வருகின்ற அக்டோபர்,8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தங்களின் வீட்டுக்கானச் சாவியைப் பெற்று 2022 ஆம் ஆண்டுக்கான தீபாவளியை மகிழ்ச்சியுடன் சொந்த மனையில் கொண்டாடலாம்,” என்றார்.

இத்தோட்டத்தில் வாழும் பொது மக்களுக்கு வீடுகள் மட்டுமின்றி இங்கு அமைந்திருக்கும்
கோவில் மற்றும் மண்டபமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என பேராசிரியர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் எங் மொய் லாய்; மாநில முதல்வர் அலுவலக வாரியத் துணை இயக்குநர் டத்தின் பாரதி, Eco World மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.