தாமான் செந்துல் ஜெயா வெள்ள நிவாரணத் திட்டமானது திடீர் வெள்ளத்தை வெற்றிகரமாகக் குறைத்துள்ளது

Admin
img 20240503 wa0153

புக்கிட் தெங்கா – இங்குள்ள தாமான் செந்துல் ஜெயாவிற்கு அருகாமையில் பல்வேறு வெள்ள நிவாரணத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டதால் அடிக்கடி திடீர் வெள்ளம் ஏற்படுவதைக் குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளன.

பினாங்கு மாநில அரசு இங்குள்ள செந்துல் ஜெயா பம்ப் ஹவுஸ் அருகே
‘flap gate’ மற்றும் ‘pam skru’ கட்டுமானத் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்த சுமார் ரிம1 மில்லியன் செலவிட்டுள்ளது என முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“இங்கு அருகில் உள்ள பாரிட் 5-ன் பக்கத்தில் ‘flap gate’ ரிம200,000 நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டது. இது குடியிருப்புப் பகுதிக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைத் தடுக்க உதவுகிறது.

மேலும், தாமான் செந்தூல் ஜெயா பம்ப் ஹவுஸில் ‘skru pam’ நிறுவும் திட்டமும்
ரிம800,000 நிதிச் செலவில் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

“புக்கிட் மின்யாக் கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (எம்.பி.கே.கே) தலைவரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், இதுவரை இந்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்தியதன் மூலம் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டுள்ளது,” என்று
புக்கிட் தெங்கா சட்டமன்றத் தொகுதிக்கு வருகையளித்தப் போது முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்தச் செய்தியாளர் கூட்டத்தில், ​​இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர், டேனியல் கூய் சி சென்; புக்கிட் தெங்கா மாநில சட்டமன்ற உறுப்பினர், கூய் சியோ லியுங்; புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக்; செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர், ரேச்சல் தெஹ் சுவான் யீன் மற்றும் எம்.பி.கே.கே தலைவர் புக்கிட் மின்யாக், சியூ சின் இயூ கலந்து கொண்டனர்.

மாநில அரசு இந்த இரண்டு திட்டங்களைத் தவிர்த்து, ரிம1 மில்லியன் செலவில் தாமான் செந்தூல் மற்றும் தாமான் டுகு குடியிருப்பு ஒரு பகுதி முழுவதும் ரிம1 மில்லியன் செலவில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறினார்.

“மேலும், தாமான் டுக்கு, தாமான் செந்துல் ஜெயா, தாமான் செந்துல் இண்டா மற்றும் தாமான் புக்கிட் மின்யாக் ஆகிய இடங்களில் சாலை மேம்படுத்தும் திட்டத்திற்கு ரிம600,000 மற்றும் லோரோங் செந்தூல் 5, 6, 12, 15, 16, 17, 19 மற்றும் தாமான் ஜுரு உட்பட அனைத்துப் பகுதிகளில் வடிக்கால் பழுதுபார்ப்பதற்காக ரிம200,000 நிதி ஒதுக்கீடுச் செய்யப்படுகிறது.

“மேலும், இப்பகுதியில் இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அதேவேளையில், மாநில அரசு இப்பகுதியில் மண் அகழிகள் அமைப்பது உட்பட மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த
எம்.பி.எஸ்.பி மற்றும் மாநில நீர்ப்பாசன மற்றும் வடிக்கால் துறை (JPS) இணக்கம் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“எம்.பி.கே.கே புக்கிட் மின்யாக் பகுதியில் 11 வீடமைப்புக் குடியிருப்புகள் மற்றும் இரண்டு பாரம்பரிய கிராமங்கள் உள்ளன. இதில் 2,800 வீடுகள் மற்றும் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகள் என 17,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

“எனவே, இங்கு செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் பொது மக்களின் அடிப்படைத் தேவையான வெள்ள நிவாரணத் திட்டம் தொடர்பானவை,” என்று அவர் கூறினார்.