பட்டர்வொர்த்: இந்து மதத்தின் திருமுறை மரபைப் பாதுகாத்து, அதனை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், பினாங்கு மாநிலம் முழுவதும் உள்ள 12 வட்டாரப் பேரவைகளைச் சேர்ந்த 3500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 48-ஆவது மாநில அளவிலான திருமுறை ஓதும் விழாவில் பங்கேற்றனர்.

மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநிலப் பேரவை (MHSPSC), பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் பினாங்கு ஹர்மொணி வாரியம் (HARMONICO) ஆகியவற்றின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவின் மாநில அளவிலான இறுதிப் போட்டி, ஆகஸ்ட் 2-ஆம் தேதி பட்டர்வொர்த், மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இறுதிப் போட்டியில் மாநிலம் முழுவதிலுமிருந்து தகுதி பெற்ற 600 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்தத் திருமிறையின் தொடக்க விழாவை செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தொடக்கி வைத்தார். இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநிலப் பேரவைத் தலைவர் விவேக ரத்னா தர்மன் ஆனந்தன், இந்த வருடாந்திர திருமுறை ஓதும் விழா வெறும் போட்டி மட்டுமல்ல; மாறாக, இளைய தலைமுறையினரிடையே இந்து சமய மரபைப் பாதுகாத்து, அதனை வலுப்படுத்துவதற்கான முக்கியமான தளமாகத் திகழ்கிறது என்று கூறினார்.

“திருமுறை ஓதும் விழா என்பது வெறும் போட்டிக்கு அப்பாற்பட்டது. நமது சைவ சமய மரபைப் பாதுகாத்து, அதனை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் அரிய தளமாக இது விளங்குகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் வழியாக நமது ஆன்மிகப் பாரம்பரியம் தொடர்ந்து நிலைத்திருந்து, வருங்கால தலைமுறைகளுக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்துகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த வருடாந்திர திருமுறை ஓதும் விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஏற்பாட்டுக் குழுவினர் புதிதாக ’63 நாயன்மார்கள் திருமுறைத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளதாக தர்மன் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது நிறுவனங்களைச் சேர்ந்த 63 நிரந்தர ஆதரவாளர்களை இணைத்துக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆதரவாளரும் ஆண்டுதோறும் ரிம500-ஐ நிதியுதவி வழங்கவுள்ளனர்.

ஆண்டுதோறும் மே மாதத்தில் ஆதரவாளர்களிடமிருந்து திரட்டப்படும் இந்நிதி, திருமுறை ஓதும் விழாவைத் தொடர்ந்து நடத்துவதற்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.

“இதுவரை 35 ஆதரவாளர்கள் இத்திட்டத்தில் இணைவதற்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளனர். மேலும் பலர் முன்வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முயற்சியின் மூலம், ஆண்டுதோறும் நிதியுதவி கோரி பலரையும் அணுக வேண்டிய தேவையின்றி, திருமுறை ஓதும் விழாவைத் தொடர்ந்து நடத்த முடியும்.

“மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் இணையும் 63 ஆதரவாளர்களும், அவர்களின் வாழ்நாள் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாநில அளவிலான திருமுறை ஓதும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கௌரவிக்கப்படுவார்கள்,” என்று தர்மன் தெரிவித்தார்.

மேலுன், நிறைவு விழாவின்போது, எதிர்காலத் தலைமுறையினருக்காக திருமுறை மரபைப் பாதுகாத்து வலுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ’63 நாயன்மார்கள் திருமுறைத் திட்டத்தை’ ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார்.
“சிவபெருமானைப் போற்றும் பன்னிரு திருமுறைகளைக் கொண்ட திருமுறை, இந்து மதத்தின் தொன்மையான சமய இலக்கியங்களுள் ஒன்றாகும். இவ்விழாவுக்கு பொதுமக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததுடன், தமிழர் சமய, பண்பாட்டு மற்றும் பாரம்பரிய மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் பங்கேற்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர் என டத்தோ ஸ்ரீ சுந்தராஜு பாராட்டினார்.
தேசிய மாதக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பங்கேற்பாளர்களுக்கு மலேசியத் தேசியக் கொடியான ‘ஜாலூர் கெமிலாங்’ வழங்கப்பட்டதுடன், ஒற்றுமை மற்றும் தேசப்பற்றை வலியுறுத்தும் தேசபக்திப் பாடல்களும் இடம்பெற்றன.
இதனிடையே, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர், இந்த ஆண்டு திருமுறை ஓதும் விழாவை வெற்றிகரமாக நடத்த பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சிக்காக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் ரிம5,000 நிதியுதவியை வழங்கிய அவர், இளைய தலைமுறையினர் தங்களின் சமயப் பண்பாடுகளையும் தேசியப் பொறுப்புணர்வையும் சமமாகப் பேணிக் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரும் செனட்டருமான லிங்கேஸ்வரன், இந்து அறப்பணி வாரியம் வழங்கிய ரிம5,000 நிதியுதவிக்கு, கூடுதலாக மலேசிய இந்து சங்கத்தின் மாநில வட்டாரப் பேரவைக்கு ஆதரவளிக்கும் வகையில் ரிம12,000 நிதியுதவியும் வழங்கியுள்ளார் என்பது பாராட்டத்தக்கது.
இப்போட்டிக்கான கூடுதல் நிதியுதவியாக மாநில முதலமைச்சர் ரிம10,000; பினாங்கு மாநில ம.இ.கா சார்பில் ரிம10,000 மற்றும் டத்தோ ஸ்ரீ கா. புலவேந்திரன் உட்பட மேலும் பல கொடையாளர்களும் நிதியுதவி அளித்தனர்.
மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர். இந்த விழாவில்
மாணவர்கள் தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், பேச்சுப் போட்டி, திருமுறை பதிகப் பாராயணம், பஞ்சபுராணம் என பல சமயப் போட்டிகள் இடம்பெற்றன.
மாநில அளவிலான திருமுறை ஓதும் போட்டியில், பட்டர்வொர்த் வட்டாரப் பேரவை வெற்றியாளராக மகுடம் சூடியது; அதனைத் தொடர்ந்து குலுகோர் வட்டாரப் பேரவை இரண்டாம் இடத்தையும், செபராங் ஜெயா வட்டாரப் பேரவை மூன்றாம் இடத்தையும் வெற்றிப் பெற்றது.
வருகின்ற 30.8.2026 அன்று தேசிய அளவிலான திருமுறை விழா நடைபெறும் என்றும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.