தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனித்து வாழும் தாய்மார்கள், பிள்ளைகளுக்கு அன்பளிப்பு

Admin

அண்மையில் பினாங்கு முத்தியாரா மகளிர் சங்கம் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மைய ஒருங்கிணைப்பில் ‘தீபாவளிக் கொண்டாட்டம்’ எனும் நிகழ்ச்சி மிதமான முறையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஒன்பது தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் 11 பிள்ளைகளுக்குப் பரிசுக் கூடைகள், பற்றுச்சீட்டுகள் மற்றும் பணம் வழங்கப்பட்டு மகிழ்விக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சி குத்துவிளக்கு விளக்கேற்றி, அணிச்சல் வெட்டி, விருந்தோம்பல் மற்றும் பரிசு வழங்கும் விழாவுடன் பாகான் லுவார் ஜே.கே.கே.கே அங்கத்தில் இனிதே நடைபெற்றது.

“தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் எளிய முறையில் இந்த கொண்டாட்டம் நடத்தப்பட்டாலும் மிகவும் அர்த்தமுள்ள நிகழ்ச்சியாகவும் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் விழாவாகவும் இது திகழ்கிறது,” என முத்தியாரா மகளிர் சங்கத் தலைவரும் மாநில முதல்வரின் துணைவியாருமான தான் லீன் கீ தனது உரையில் இவ்வாறு கூறினார்.


“கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) கடைப்பிடிப்பது முக்கியம்.

“இந்த கடினமான நேரத்தில் தனித்து வாழும் தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளின் நலனுக்காக வலிமை மிக்கவர்களாக செயல்படுவது அவசியம்.

“பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்கவும் நாட்டிற்கு மீண்டும் பங்களிக்கவும் வழிகாட்டுங்கள்,” என்று அவர் தனது உரையில் கூறினார்.

தனித்து வாழும் தாய்மார்கள் தங்களுக்கு வேண்டிய உதவிகள் கேட்க தயங்கக் கூடாது என கேட்டுக் கொண்டார்.

“பினாங்கு மாநில அரசாங்கம் மக்கள் நலன் காக்கும் அரசாங்கமாகும். எனவே, மாநில அரசு தேவைப்படுபவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளது,” என்று அவர் கூறினார்.

“பிள்ளைகள் தங்கள் தாய்மார்களின் தியாகங்களை உணர்ந்து அவர்களை நேசிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

“குழந்தைகள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும், இதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கலாம். அன்பாகவும், நேர்மையுடனும் இருங்கள்,” என்று அவர் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி தனித்து வாழும் தாய்மார்களுக்கு பரிசுக்கான பற்றுச்சீட்டுகள் எடுத்து வழங்கினார். அதோடு, பிள்ளைகளுக்குப் பண்டிகைப் பணமும் கொடுத்து மகிழ்வித்தார்.

பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தீ சின் மற்றும் நன்கொடையாளர் டத்தின் ஜென்னி ஆகியோர் வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு பரிசுக் கூடைகளை நன்கொடையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பினாங்கு சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத மத விவகாரக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.