தீ விபத்தில் பாதிக்கப்பட்ட உஜோங் பத்து மக்களுக்கு நிதியுதவி

Admin

பட்டர்வொர்த் உஜோங் பத்து கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று இந்திய குடும்பங்களின் வீடு சேதமடைந்தது. இத்தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவிக் கரமும் நீட்டினார்.

இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்ட உஜோங் பத்து கிராமவாசிகளான மீனாட்சி த/பெ பெரியசாமி (வயது 54), நீலமலர்க்கண்ணி த/பெ வீராசாமி (வயது 50), எம்.அன்னபூரணி (வயது 51) ஆகியோருக்கு முதல்வர் ஆறுதல் கூறியதோடு பினாங்கு மாநில பேரிடர் நிதியிலிருந்தும் சமூகநல இலாகாவின் நிதியிலிருந்தும் நிதி வழங்கப்பட்டது.

முழுமையாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தலா ரிம 3500 வழங்கப்பட்டது.   மற்றொரு குடும்பமோ ரிம2500 பெற்றுக் கொண்டது. சிறியளவில் பாதிக்கப்பட்ட இன்னொரு குடும்பத்திற்கு    ரிம 200 வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில முதல்வர் லிம் குவான் எங்குடன் மாநில சுகாதார சமூகநல ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ, முதல்வரின் பாகான் தொகுதி சமூகநல அதிகாரி திரு கிருஷ்ணமூர்த்தி,  செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் திரு சந்திரசேகரன், பாகான் டாலாம் சட்ட மன்ற உறுப்பினர் திரு தனசேகரனின் சிறப்பு அதிகாரிகள் ஆகியோரும் இந்நிதிவுதவி வழங்கும்போது உடனிருந்து ஆறுதல் தெரிவித்தனர்.