தெலுக் இண்டா குடியிருப்பில் 2 புதிய மின்தூக்கிகள் 

Admin

பிறை – மாநில அரசு பினாங்கு அதிகபட்ச 80 சதவீத பராமரிப்பு நிதியம் (TPM80PP) மூலம் தெலுக் இண்டா அடுக்குமாடி குடியிருப்பில் இரு புதிய மின்தூக்கிகள் பொருத்துவதற்கு  ரிம860,000-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கூட்டு நிர்வாக அமைப்பு கட்ட வேண்டுய 20 விழுக்காட்டு (ரிம172,000) நிதிச் செலவினை  முதல்வர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. 

இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் இந்த குடியிருப்பில் வாழும் பொது மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும். இந்த தெலுக் இண்டா அடுக்குமாடியில் 900-க்கும் மேற்பட்ட நடுத்தர மலிவு விலை வீடுகள் இருக்கின்றன என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். 

“மேலும், மாநில அரசு மற்றும் இரண்டாம் துணை முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில்  இருந்து 2012-ஆம் ஆண்டில் ரிம26,748.80 செலவில் மூன்று மின்துக்கிகள் பழுதுபார்க்கப்பட்டது; பிளாக் இ1 மற்றும் இ2-ல் இரண்டு மின்தூக்கிகள் பழுதுபார்க்க ரிம170,000 நிதியுதவி (2015 ); மற்றும் பிளாக் டி1 மற்றும் டி2-ல் நான்கு மின்தூக்கிகள் 2017-ல் பழுதுபார்க்க (ரிம193,658.40) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என எடுத்துரைத்தார். 

“அதுமட்டுமின்றி, பிளாக் இ1 மற்றும் இ2-க்கான தி.என்.பி (தேசிய மின்சார வாரியம்) மின்சார கட்டணம் கடந்த  2013-ல் ரிம80,000 மற்றும் 2014-ஆம் ஆண்டில் ரிம80,000 என பிறை சட்டமன்ற நிதி ஒதுக்கீடு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

“தற்போது  புதியதாக  பொருத்தப்பட்ட  இரண்டு மின்தூக்கிகளின் மூலம், இங்கு வசிக்கும் பெரும்பாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குழுவினரின் பொது வசதியை மேம்படுத்தும்,” என முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். 

இரண்டு புதிய மின்தூக்கிகள் பொருத்தப்பட்டதோடு அதனை பாதுகாக்கவும் அக்குடியிருப்பின் சுற்றுச்சூழல் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்யவும் மின்தூக்கி பயன்பாட்டு அட்டை மற்றும் இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் 
பொருத்தப்பட்டுள்ளது என இராமசாமி கூறினார். 

“இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிளாக் இ1 மற்றும் இ2 ஆகிய குடியிருப்புப் பகுதியில் மிகவும் கடுமையான அசுத்தப் பிரச்சினைகள் எதிர்கொண்டதாக  அறிவிக்கப்பட்டது.

“இந்த பிரச்சினைக்குத் தீர்வுக்கான கடந்த 2021 மே மாதம் செபராங் பிறை மாநகர் கழகத்துடன் சந்திப்புக் கூட்டம் நடத்தியதாக,” பிறை சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி கூறினார்.

செய்தியாளர்  சந்திப்பு கூட்டத்தில் பேசிய பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு, தெலுக் இண்டா குடியிருப்பில்  வசிப்பவர்கள் இங்கு பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஜே.எம்.பி.க்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

இந்த குடியிருப்புப் பகுதியில் மின்சார கட்டணம் செலுத்தவும் பத்து காவான் நாடாளுமன்ற சார்பில்  ரிம10,000 நிதி ஒதுக்கீடு வழங்கியதாகவும் கஸ்தூரி தெரிவித்தார். 

இங்குள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் ஜே.எம்.பி.க்கு பராமரிப்பு கட்டணத்தை செலுத்துவதுடன், இந்த குடியிருப்பின் சுற்றுச்சூழலை தூய்மையைப் பராமரிப்பதற்கும்  ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இந்த செய்தியாளர் கூட்டத்தில் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்களான ஜேசன் ராஜ் மற்றும் டேவிட் மார்ஷல் கலந்து கொண்டனர்.

பணி ஓய்வுபெற்ற  நமசிவாயம்,53  ஜே.எம்.பி உண்மையில்  இங்கு வசிக்கும் அனைத்து அடுக்குமாடி குடியிருப்பாளர்களிடம் இருந்தும் மாதத்திற்கு ரிம30 பராமரிப்புக் கட்டணத்தை வசூலிப்பதில் மிகவும் முனைப்புடன் செயல்படுகிறது, என்றார்.

மேலும், இந்த குடியிருப்பில் வசிக்கும் சில உள்நாட்டு மற்றும் அந்நிய நாட்டவர்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்தமாட்டார்கள். அதோடு, சுற்றுச்சூழல் தூய்மையையும் பேண மறுக்கின்றனர் என குறிப்பிட்டார். 

துப்புரவுப்பணி குத்தையாளராகப் பணிபுரியும் துர்கா தேவி,31 கடந்த 2000-ஆம் ஆண்டு இந்த அடுக்குமாடியில் வசிக்க தொடங்கும் போது இதன் சுற்றுச்சூழல் மிகவும் தூய்மையாக காட்சியளித்தது, என தெரிவித்தார். 

“நான் சிறு வயது முதல் இங்கு வசிக்கிறேன். எனக்கு 10 வயது இருக்கும் போது கம்போங் தெலுக் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தெலுக் இண்டா அடுக்குமாடியாக உருமாற்றம் கண்டது.

“தொடக்கத்தில் இந்த குடியிருப்புப் பகுதியில் அதன் உரிமையாளர்கள் வசித்து வந்தனர். அப்பொழுது இப்பகுதியின் தூய்மை பாதுகாக்கப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. 

“2008-ஆம் ஆண்டு முதல், இந்த பகுதியின்  தூய்மை புறக்கணிக்கப்பட்டது, குறிப்பாக வாடகைக்கு வசிப்பவர்கள் அல்லது குடியிருப்புப் பிரிவுகளில் வசிக்கும் சில வெளிநாட்டவர்கள், தூய்மை மற்றும் பராமரிப்பு கட்டணங்களை ஜே.எம்.பி-க்கு செலுத்துவதில்லை.

“எனவே, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தெலுக் இண்டா அடுக்குமாடி குடியிருப்பின் தூய்மை மற்றும் பொது உடைமை பாதுகாக்க வேண்டும், என்றார்.