தேசிய ரீதியில் பினாங்கு முதல் ஊக்க மருந்தளவு 60.9% பெற்றுள்ளது

Admin

ஜாவி – பினாங்கில் மொத்தம் 60.9 விழுக்காடு அல்லது 1,080,170 குடிமக்கள் இதுவரை முதல் ஊக்க மருந்தளவு பெற்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு அடுத்தப்படியாக பினாங்கு மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று அதிகாரப்பூர்வ அகப்பக்கமான ‘COVIDNOW’ இன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை நாட்டில் சுமார் 7 மில்லியன் மக்கள் முதல் டோஸ் ஊக்க மருந்தளவு பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிரதமரின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு தெரிவித்தார்.

“மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பினாங்கு இன்னும் மேல் நிலையில் உள்ளது, பினாங்கு மக்களில் சுமார் 60 சதவீதம் பேர் (முதல்) ஊக்க மருந்தளவுப் பெற்றுள்ளனர்.

“கிள்ளான் பள்ளத்தாக்கைத் தவிர, விழுக்காடு அடிப்படையில் பினாங்கு மாநிலம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது,” என்று நிபோங் திபால் அரங்க மேம்பாட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடக்கி வைத்து பின்னர் நில விவகாரங்கள் மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கூறினார்.

“முதல் ஊக்க மருந்தளவு பெறாதவர்கள் உடனடியாக பெறுமாறுக் கேட்டுக் கொண்டார்.

“சுகாதார அமைச்சகத்தின் (MOH) கூற்றுக்கு இணங்க, குறைந்தப்பட்சம் மூன்றாவது ஊக்க மருந்தளவு பெறுவதற்கு இணக்கம் கொள்ள வேண்டும். தற்போது நான்காவது ஊக்க மருந்தளவைக் காட்டிலும் மூன்றாவது மருந்தளவு மிக அவசியமாகக் கருதப்படுகிறது,” என்று அவர் விளக்கமளித்தார்.