தைப்பூசத்திற்கு தங்க இரத ஊர்வலம் – பேராசிரியர்

பினாங்கு தங்க இரத்தை நேரில் சென்று பார்வையிட்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி

இவ்வாண்டு பிப்ரவரி 9-ஆம் திகதி கொண்டாடவிருக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு ஶ்ரீ பாலதண்டாயுதபாணி தண்ணீர்மலை ஆலயத்திற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சியில் சொந்தமான தங்க இரதம் பினாங்கு மாநிலத்தில் பவனி வரவிருப்பதாகக் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி..
அண்மைய காலமாக சர்ச்சையில் நீடித்து வரும் தங்க மற்றும் வெள்ளி இரதம் ஊர்வலம் குறித்து தற்போது விளக்கமளிக்கப்பட்டது. இந்து அறப்பணி வாரியம் காவல்துறையினரிடம் இரண்டு இரத ஊர்வலத்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளதை அவர் குறிப்பிட்டார். தங்க இரதம் கூயின் ஸ்ரிட் மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலை 5.00 மணிக்கு புறப்படும். அதே வேளையில் வெள்ளி இரதம் சுமார் 1 1/2 மணி கால அவகாசத்தில் காலை 6.30 மணிக்கு கூயின் ஸ்ரிட் மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘செட்டிப் பூசம்’ என்றழைக்கப்படும் தைப்பூசத்தின் முதல்நாள் 8 பிப்ரவரி திகதி 2017- அன்று இரண்டு இரதங்களும் கூயின் ஸ்ரிட் மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சூலியா சாலை, விக்டோரியா சாலை, பிராங்கின் சாலை, மெகசின் சாலை, டத்தோ கெராமாட் சாலை, ஜாலான் உத்தாமா சாலை, ஜாலான் கெபுன் பூங்கா சாலை வழியாக முருகன் பெருமாள் வேலுடன் பவனி வந்து அத்தினத்தில் நள்ளிரவில் தண்ணீர்மலை ஆலயத்தை சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு ஶ்ரீ பாலதண்டாயுதபாணி தண்ணீர்மலை ஆலயத் தலைவர் திரு.சுப்பிரமணியம் இவ்வாலயத்திற்கு கடந்த 2009- ஆண்டு தொடங்கி சொந்தமான இரதம் அமைக்கும் நோக்கில் ஆயுத்த வேலைகள் நடைபெற்று தற்போது நனவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். மலேசியாவில் பழமையான ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தண்ணீர்மலை ஆலயம் சொந்த இரதம் கொண்டிருப்பது பினாங்கு வாழ் மக்களுக்கு பெருமிதம் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். எனவே, பொதுமக்கள் ஒன்றிணைந்து சமய உணர்வோடு இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ஆலய நிர்வாகக்குழு சார்பில் கேட்டுக்கொண்டார்.