தை பிறந்தால் வழி பிறக்கும்!

Admin

உழவர் திருநாள், தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு இவையனைத்தையும் உள்ளடக்கிய பொங்கல் விழா இப்போது மலேசியர்களின் விருப்பதிற்குரிய திருவிழாவாக அனைத்து நிலையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், உயர்கல்விக் கூடங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் தைப்பொங்கலை மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவ்வகையில் பினாங்கு மாநில அளவிலான பொங்கல் கொண்டாட்டம் கடந்த 18-ஆம் திகதி பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பினாங்கு முத்தமிழ்ச் சங்கம், பினாங்கு இந்து சங்கம், பினாங்கு தமிழர் பண்பாட்டு இயக்கம், பினாங்கு கலைஞர் இயக்கம், ஸ்ரீ அருள்மிகு இராமர் ஆலயம், பினாங்கு இந்து மஹா ஜன சங்கம், பினாங்கு சிறு தொழில் வியாபாரிகள் சங்கம், பினாங்கு காந்தி மண்டபம், குயின் ஸ்திரிட் மாரியம்மன் ஆலயம், தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயம், பினாங்கு மருத்துவர் சங்கம் ஆகிய இயக்கங்கள் இந்தப் பொங்கல் விழாவில் பங்கெடுத்தனர். மொத்தம் 15 மண் சட்டிகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

மூன்று கரும்புகள் பிரமிட் வடிவில் கட்டப்பட்டு, அதற்கு நடுவில் விறகுகளுக்கு இடையில் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களின் மேல் அலங்கரிக்கப்பட்ட மண் சட்டி வைக்கப்பட்டிருந்தது, ஒவ்வொரு மண்சட்டிக்கு முற்புறம் வண்ண அரிசி மாவில் கோலங்கள் இடப்பட்டு அவ்விடமே வண்ணமயமாகக் காட்சியளித்தது. மாவிலை, தோரணங்கள் கட்டப்பட்டு இந்தி அறப்பணி வாரியக் கட்டடம் இந்தியப் பாரம்பரியத்தை வெளிபடுத்தி நின்றது. வரவேற்புரையாற்றிய பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, அண்மையில் திறப்பு விழாக் கண்ட இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் முதல் கொண்டாட்டமாகத் தமிழர்களின் முக்கிய விழாவாகக் கருதப்படும் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது என்றார்.

கடந்த 50 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த முந்தைய அரசு பினாங்கு இந்தியச் சமுதாய விவகாரங்களை நிர்வகிப்பதில் தோல்வி கண்ட நிலையில், இதற்கு முற்றிலும் முரண்பாடாக வெறும் ஐந்தே ஆண்டுகளில் பினாங்கு மக்கள் கூட்டணி அரசு அடைந்துள்ள வெற்றிச் சின்னமாகவும் பெருமைக்குரிய சான்றாகவும் இந்து அறப்பணி வாரியத்திற்கு வழங்கியுள்ள இந்தப் புதிய அலுவலகம் திகழ்கிறது. இவ்வலுவலகம் இந்து அறப்பணி வாரியத்திற்கு ஆண்டுதோறும் வழங்கும் ரிம1.2 மில்லியன் மானியத்தைத் தவிர்த்து அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அம்சமாகும் என்று மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தம் சிறப்புரையில் பெருமிதம் கொண்டார்.

இப்பொங்கல் திருவிழாவில் பினாங்கு மாநில முதல்வர், துணை முதல்வர்கள் டத்தோ மன்சோர் ஒஸ்மான், பேராசிரியர் ப இராமசாமி, உட்பட, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், திரு நேதாஜி இராயர், திரு இரவீந்திரன், திரு தனசேகரன், திரு லாவ் ஹெங் கியாங், திரு லிம் ஹொக் செங், திரு இங் வெய் எய்க், டத்தோ அப்துல் மாலிக், இந்து அறப்பணி வாரிய தலைமை நிர்வாகி திரு இராமச்சந்திரன், ஆலயத் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

320984_560980730598699_1596935928_n

பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங் மண்சட்டியில் பாலை ஊற்றுகிறார்.

அருகில் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி.