புத்தாண்டு பிறந்தது தங்கத் திட்டங்களும் மலர்ந்தது.

Admin

பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தனது சிறந்த பொருளாதார நிர்வகிப்பின் பலனாக ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் மிகை நிதியைப் பெற்றுச் சாதனை புரிந்து வந்துள்ளது நாம் அறிந்ததே. இந்த வெற்றியினால்தான் பொருளாதார அடிப்படையில் மக்களுக்குத் தோள் கொடுக்கும் நோக்கில் மாநில அரசு பல தங்கத் திட்டங்களை அறிமுகம் செய்தது. மாநில அரசின் தங்கத் திட்டச் செலவுத் தொகையினைக் கடந்த முத்துச் செய்தியில் கண்டிருப்பீர்கள். மக்கள் நலன் பேணும் இத்தங்கத் திட்டத்திற்காக மாநில அரசு இதுவரை    ரிம 52,631,400 செலவிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டின் தொடக்கமாக வடகிழக்கு மாவட்டத்தின் தங்க மாணவர் திட்டம்  மற்றும் தங்கக் குழந்தை திட்டத்தின் அடையாள நிகழ்ச்சி கடந்த ஜனவரி 12-ஆம் திகதி ஸ்ரீ பினாங் மண்டபத்தில் நடைபெற்றது. மக்கள் கூட்டணி அரசின் ஆண்டுத் திட்டமான இந்நிகழ்ச்சியில் 250 மாணவர்களுக்கும் 250 குழந்தைகளுக்கும்  உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆண்டு 1 மற்றும் 4 பயிலும் ஆரம்பப் பள்ளி மாணவர்களும் படிவம் 1 மற்றும் படிவம் 4 பயிலும் இடைநிலைப் பள்ளி மாணர்களும் இந்தத் தங்க மாணவர் திட்டத்தின் வழி ரிம100 ஊக்குவிப்புத் தொகை பெறுவர். மாறாக 2011-ஆம் ஆண்டு தொடங்கி பிறந்த குழந்தைகளோ தங்கக் குழந்தை திட்டத்தின் கீழ் ரிம200 உதவித் தொகை பெறுவர்.

இன்றைய பொருளாதார சூழலில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்வதில் பெறும் சவாலை எதிர்நோக்குகின்றனர். உயர்வு கண்டு வரும் பொருட்களின் விலைகள் குறிப்பாக ஏழ்மை நிலையிலும் நடுத்தர வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குப் பெரும் சுமையாக அமைந்து வருவதால் அவர்களின் செலவுச் சுமையைக் குறைக்கும் பணியை மாநில அரசு ஆண்டுதோறும் தவறாது செய்து வருகிறது என்று மாநில முதல்வர் மேதகு லிம் குவான் தம் சிறப்புரையில் கூறினார்.

2013-ஆம் ஆண்டிற்கான முதல் கட்ட தங்கத் திட்டங்களுக்கு தகுதியான பினாங்கின் எல்லா மாவட்டங்களைச் சேர்ந்த பெறுநர்களின் எண்ணிக்கையைக் கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.

 

மாவட்டம்

2013/1 தகுதியுடைய பெறுநர்களின் எண்ணிக்கை

தங்கக் குழந்தை திட்டம்

தங்க மாணவர் திட்டம்

வடகிழக்கு மாவட்டம்

1232

5092

கிழக்கு செபெராங் பிறை மாவட்டம்

1451

8061

தென் செபெராங் பிறை மாவட்டம்

591

2888

தென்மேற்கு மாவட்டம்

735

2147

வட செபெராங் பிறை மாவட்டம்

1257

4556

 

இத்தங்கத் திட்டங்களின் அடையாள நிகழ்ச்சியில் வடகிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்களும் 250 குழந்தைகளும் புத்தாண்டு தருணத்தில் முறையே ரிம 100 மற்றும் ரிம 200 மதிப்பிலான காசோலையைப் பெற்றோர்களுடன் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

பினாங்கு வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உன்னத நோக்கில் இவ்வாண்டு முதல் மாநில அரசு சமூகப் பொருளாதார செயற்திட்டத்தை அமல்படுத்தவுள்ளது என முதல்வர் லிம் பெருமையுடன் கூறினார். வறுமைக் கோட்டிற்குக் கீழ் மாத வருமானம் பெறும் மக்களுக்கு அரசு மாதந்தோறும் உதவித் தொகை கொடுத்து உதவும். வறுமைக் கோட்டின் குறைந்த படச தொகையான ரிம770க்கும் கீழ் வருமானம் குடும்பங்கள் இவ்வுதவித் தொகையைப் பெற தகுதியானவர்களாவர். எனவே, வறுமைக் கோட்டிற்குக் குறைவாக மாத வருமானம் பெறும் குடும்பங்கள் அருகிலுள்ள தங்கள் சட்டமன்ற அலுவலம், நாடாளுமன்ற அலுவலகம், மாவட்ட அலுவலகம், மக்கள் சேவை மையம் மற்றும் கொம்தாரிலுள்ள சமூக நல அலுவலகத்திலும் உடனே பதிந்து கொள்ளுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். பினாங்கு மாநில அரசின் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு மக்கள் தங்கள் வற்றாத ஆதரவைத் தொடர்ந்து அளிப்பர் எனவும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.