தொழிற்சாலைகளில் எஸ்.ஓ.பி முறையாக பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் – டேவிட்

Admin

 

பிறை – 2021 ஆம் ஆண்டிற்கான  செபராங் பிறை மாநகர் கழகத்தின் (எம்.பி.எஸ்.பி) 24 கவுன்சிலர்களில் மொத்தம் ஐந்து புதிய முகங்கள் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் முன்னிலையில் பதவிப்பிரமானம் எடுத்து கொண்டனர். எனவே, முத்துச்செய்திகள் நாளிதழ் இத்தொடர்பாக நேர்காணலை மேற்கொண்டது.

டேவிட் மார்ஷல்

“பினாங்கு மாநிலத்தில் செயல்படும் தொழிற்சாலைகளில் தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி) முறையாக பின்பற்றுவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். பினாங்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகள் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் இருந்து பரவியவை என்பது குறிப்பிடத்தக்கது.

“அண்மையில் மத்திய அரசு  நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 2.0 அறிவித்திருந்தாலும் இம்முறை தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், அங்கு எஸ்.ஓ.பி முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதனை கையாள தேசிய பாதுகாப்புக் மன்றம் கண்காணிப்புகளைத் துரிதப்படுத்த வேண்டும்,” என்று எட்டாவது முறையாக செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலராகப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட டேவிட் மார்ஷல் முத்துச்செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலில் இவ்வாறு வலியுறுத்தினார்.

மேலும், கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு சிறுதொழில் வியாபாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் வியாபாரிகளுக்கு உதவ அவர்களுக்கு செபராங் பிறை முழுவதும் தளம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம், சாலையோரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்குவதோடு பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இச்சிறுதொழில் வியாபாரிகளுக்கு வியாபார உரிமம் மற்றும் முறையான ஆவணங்களும் வழங்கப்படும் என  டேவிட் கூறினார்.

இதனிடையே, புதிய இயல்பில் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, உபயோகித்த முகக்கவசங்களை எல்லா இடங்களிலும் வீசுகின்றனர். இந்நிலையை மாற்றியமைக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இதன்வழி கோவிட்-19 சங்கிலி பரவுவதையும் துடைத்தொழிக்க முடியும், என்றார்.

தொடர்ந்து, இணையதளத்தில் வியாபாரம் செய்யும் திட்டத்தை கடந்தாண்டு செபராங் பிறை மாநகர் கழகம் அறிமுகப்படுத்தியது. கோவிட்-19 தாக்கத்தால் வேலையிழந்து தவிப்போருக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இணையவழி வியாபாரத்தில் ஈடுப்பட செபராங் பிறை மாநகர் கழகம் உரிமம் வழங்குகின்றது. இதனைப்பற்றிய விபரங்கள் அறியாதோர் செபராங் பிறை மாநகர் கழக அகப்பக்கத்தை வலம் வரலாம்.

தொடர்ந்து, செபராங் பிறை முழுவதும் பணமில்லா பரிவர்த்தனை துரிதப்படுத்த பொதுமக்களுக்கு அதன் தொடர்பாக கல்வி புகட்டப்படும். இதன்மூலம், சிறுவர்கள் முதல் பெரியவர் வரை தொழில்நுட்பத்தின் அவசியத்தை தூண்டுவதோடு கோவிட்-19 தாக்கத்தையும் குறைக்க முடியும் என்று டேவிட் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜெசன் இராஜ்

“செபராங் பிறை வட்டாரத்தில் அந்நிய தொழிலாளர்கள் அதிகமாக கடை வியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையை கட்டுப்படுத்த செபராங் பிறை மாநகர் கழகம் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளது. சட்டவிரோத உரிமம் கொண்டு வியாபாரங்களில் ஈடுப்படும் அந்நிய தொழிலாளர்களால் நம் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினராக மூன்றாவது தவணையாக பதவிப்பிரமாணம் எடுத்து கொண்ட ஜெசன் இராஜ் கூறினார்.

அந்நிய தொழிலாளர்கள் வியாபாரத்தில் ஈடுப்படுவதை கட்டுப்படுத்த செபராங் பிறை மாநகர் கழகத்தில் சிறப்புப் பணிக்குழு நியமிக்கப்படும். இதன்மூலம், செபராங் பிறை வட்டாரத்தில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.

பினாங்கில் இணையவழி உணவு வாங்கும் முறை மிகவும் பிரபலமாகியுள்ளது. இன்னும் வருங்காலங்களிலும் இதன் விண்ணப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் இவர்களுக்கு உதவ உரிமம் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்துவதை இவ்வாண்டு நோக்கமாக கொண்டுள்ளதாக ஜெசன் கூறினார். இத்திட்டத்தின் வாயிலாக உணவு வாங்க வெளியில் வரும் மக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டு செபராங் பிறை நகரத்தை குறைந்த கார்பனற்ற நகரமாக மாற்றியமைக்க முடியும் என்று ஜெசன் நம்பிக்கை தெரிவித்தார்.