நகரப் புதுப்பிப்பு: சமூக நலனுக்கான புதிய பாதை – குமரன்

Admin
img 20250519 wa0085

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் மேம்படுத்துவது மற்றும் அதிகரிப்பது அவசியமாகும்.

இம்மாநிலத்தில், குறிப்பாக பாகான் டாலாம் தொகுதியில் உள்ள பழைய வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் மலிவு விலை அடுக்குமாடி திட்டங்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதன் பாதுகாப்பும் சுகாதாரமும் பாதிக்கப்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் 15வது சட்டமன்ற கூட்டத்தொடர் தொகுப்புரையில் இதனைத் தெரிவித்தார்.

பாகான் டாலாம் தொகுதியில் பல வீடமைப்புத் திட்டங்களில் கட்டிட அமைப்புகளில் சேதம், பழுதடைந்த மின்சார இணைப்புகள், அடைப்பு ஏற்பட்ட கால்வாய்கள், அடிக்கடி பழுதாகும் மின் தூக்கிகள் போன்ற பிரச்சனைகளை கொண்டுள்ளன. இதில் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் பி40 வருமானக் குழுவினரும் முதியோர்களும் வசிக்கின்றனர். இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் பாதிக்கின்றன.

எனவே, இரண்டு ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை செயல்படுத்துமாறு மாநில அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.

“குறுகிய காலத்தில், கூரை பழுதுபார்ப்பு, வடிகால் அமைப்புகள், விளக்குகள் உள்ளிட்ட பாழடைந்த குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளை உடனடியாகப் பராமரிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இதன் வழி, பாதுகாப்பு மற்றும் மின்தூக்கிகள் விபத்துக்கள் மற்றும் டெங்கி மற்றும் தொற்று நோய்கள் போன்ற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க இது அவசியமாகும்.

நீண்டகால நோக்கத்தில், மாநில அரசு ஒரு விரிவான நகரப் புதுப்பிப்பு (urban renewal) கொள்கையை உருவாக்க வேண்டும். இதன் மூலம், பழைய மற்றும் பராமரிப்பு குறைந்த நகர்ப்புற பகுதிகளை புதுப்பிக்க, மேம்படுத்த மற்றும் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்க முடியும்.

இந்த மேம்பாட்டு மாதிரி, அசல் குடியிருப்பாளர்கள் புறக்கணிக்கப்படாமல், அவர்களுக்கு பாதுகாப்பான, நவீன மற்றும் வசதியான சூழலில் புதிய வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த அணுகுமுறை, பழைய வீடுகளின் கட்டமைப்பு சிக்கல்களை தீர்ப்பதுடன், சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் என கேட்டுக்கொண்டார்.

பினாங்கு STEM திறன் திட்டம் மற்றும் பினாங்கு GBS தொழில் அகாடமி ஆகியவற்றின் முயற்சிகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனினும், இத்திட்டங்கள் சமூக மட்டத்தில், குறிப்பாக பாகான் டாலாம் தொகுதியில் பரவலாக செயல்படவில்லை.

எனவே, சமூக மட்டத்தில் மேலும் பல தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி (TVET) மற்றும் டிஜிட்டல் பயிற்சி திட்டங்களை உருவாக்க வேண்டும். இது மனித வளத்தின் வளர்ச்சியை நகர் அல்லது தொழில்நுட்ப மையங்களுக்கு மட்டுப்படுத்தாமல் புறநகர்களிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்,” என குமரன் தெரிவித்தார்.

எனவே, மாநில அரசு, தன்னார்வ அமைப்புகள் (NGO) மற்றும் சமூக மையங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் திறன்கள் சார்ந்த தொழில்கல்வி பயிற்சிகள் வழங்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த முயற்சிகள், பினாங்கு மாநிலத்தின் அனைத்து இளைஞர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் திறன்களை மேம்படுத்தி, தொழில்நுட்ப உலகில் முன்னேற உதவும்.

பாகான் டாலாம் போன்ற பகுதிகளில் சமூக TVET மேம்பாட்டு மையங்களை நிறுவுவது, இளைஞர்கள் குறைந்த செலவில் அல்லது இலவசமாக தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கும். இது அவர்களின் வேலை வாய்ப்பு பெறும் திறனை உயர்த்தும்.

அதே நேரத்தில், தங்கள் வசிப்பிடத்திலிருந்து வெளியே தொழில்துறை பயிற்சியில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் பரிந்துரைக்கிறேன். இதன்மூலம் நிதி அல்லது போக்குவரத்து குறைபாடுகள் காரணமாக யாரும் வாய்ப்புகளை இழக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.