நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – மாநில அரசு மத்திய அரசு அண்மையில் அறிவித்த நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை கடந்த மே 8-ஆம் தேதி தொடங்கி கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் என இன்று கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலை செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அறிவித்தார்.

எனினும், மாநில முதல்வர் சாவ் நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை நாளை (4 மே 2020) தொடர்ந்து பின்பற்றப்படும் என அவர் தெளிவுப்படுத்தினார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்) அறிவுறுத்தல்கள் மற்றும் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முடிவிற்கு இன்று காலை மாநில பாதுகாப்பு குழு (ஜே.கே.கே.என்) உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறினார்.

மாநிலத்தில் உள்ள மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத் துறையின் மேம்பாடு உறுதி செய்வதற்குத் தேவையான மாற்றங்கள் மற்றும் மாற்றங்களின் அடிப்படையில் ‘பினாங்கு மறுமலர்ச்சி திட்டம்’ செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

“முதல் மூன்று நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையின் போது செயல்பட அனுமதிக்கப்பட்ட துறைகள் மட்டுமே (பொது போக்குவரத்து உட்பட) செயல்படும். பட்டியலில் இல்லாத துறைகள் ‘பினாங்கு மாநில மறுமலர்ச்சி திட்டத்தின்’ கீழ் மே 8-ஆம் தேதி தொடங்கி செயல்படும்.

“இந்த நடவடிக்கை மாநில அரசு குறிப்பாக அமலாக்க அம்சத்தில் ஒரு விரிவான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இந்த நான்கு நாட்களுக்குள் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் இயக்கங்களைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் உதவும்.

“கைத் தூய்மி, சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை சம்மந்தப்பட்ட தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும்”, என மாநில முதல்வர் சாவ் விரிவுப்படுத்தினார்.

மேலும் கூறிய சாவ், ‘பினாங்கு மறுமலர்ச்சி திட்டம்” நெரிசலைத் தடுப்பதற்கும், நடைமுறை சட்டத்திட்டங்களை பின்பற்றவும் மற்றும் பொருளாதாரத் துறையின் மேம்பாடு ஆகியவற்றைப் உறுதிப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையின் அமலாக்க காலம் மே மாதம் 12-ஆம் நாள் வரை இருப்பதால் அதனை மாநில மக்கள் பின்பற்றுமாறு அவர் நினைவுப்படுத்தினார். எனவே, பணி அனுமதி தவிர மற்ற அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை மாநில முதல்வர் தெளிவுப்படுத்தினார்.

ஆகவே, அனைத்து துறைகளும் 3 ஆம் கட்டத்தில் (மே 13 முதல்) முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படுகின்றன, மேலும் அவை நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை
(எஸ்.ஒ.பி) கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.