நீர்ப் பற்றாக்குறை தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியம்

இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி
இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி

கூட்டரசு அரசாங்கம் நீர் விநியோகப் பிரச்சனைத் தவிர்ப்பதற்கு சிறப்பு அமைச்சரவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் உலக நீர் தினத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் நமது நாடு நீர்ப் பற்றாக்குறை பிரச்சனை எதிர்நோக்குவதால் கூட்டரசு அரசாங்கம் மழையை மட்டுமே எதிர்பாராமல் பல ஆயுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். நீர்ப் பிரச்சனை என்பது மாநில பிரச்சனையாகக் கருதாமல் தேசப் பிரச்சனையாகக் கையாள வேண்டும் என ஆயர் ஈத்தாம் அணையில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பினாங்கு நீர் விநியோக வாரியம் வறட்சியான பருவநிலைக்கு ஏற்ப நீர் விநியோகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக இயக்குநர் பொறியியலாளர் டத்தோ ஜாசானி மைடின்சா நிகழ்வின் வரவேற்புரையில் கூறினார். மேலும், ஆயர் ஈத்தாம் மற்றும் தெலுக் பாஹாங் அணைகளில் முறையே 56 நாட்கள் மற்றும் 180நாட்களுக்குப் பயன்படுத்தும் அளவிற்கு நீர் சேமிப்பு இருப்பதாக அறிவித்தார்.11 ஆண்டுக்காலம் ஒப்பிடுகையில் 70% மழை நீர் சேகரிப்புக் குறைந்துள்ளது.
மூடா அணை மற்றும் பெரிஸ் அணையிலிருந்து பெறப்படும் நீரின் மூலமாக மூடா ஆற்றின் நீர் வளம் செழிக்கின்றது. ஆயினும் இவ்விரு அணைகளிலும் இருக்கும் நீரின் அளவு ஜூன் மாத இறுதி வரை பயன்படுத்த இயலாது. அதுமட்டுமின்றி, 80% பினாங்கின் நீர் விநியோகம் மூடா ஆற்றிலிருந்து தான் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே, கெடா மாநில அரசாங்கம் மற்றும் கூட்டரசு அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 ஆயர் ஈத்தாம் அணை
ஆயர் ஈத்தாம் அணை

கூட்டரசு அரசாங்க முக்கிய துறைகளுக்கு 6 அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பியும் இதுவரை எவ்வித பதிலும் பெறவில்லை. கூட்டரசு அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வடக்கு மாநிலங்களில் வசிக்கும் 4 மில்லியன் மக்களின் நீர்ப் பிரச்சனைத் தீர்க்க முடியும். பினாங்கு நீர் விநியோக வாரிய அதிகாரப்பூர்வ கடிதங்களில் கூட்டரசு அரசு கீழ் குறிப்பிட்டுள்ள 2 நடவடிக்கை மேற்கொள்ள குறிப்பிடப்பட்டுள்ளன.

* வடக்கு மாநிலங்களில் நீர்ப் பாசனம் முறையை ஒத்திவைத்து, நீர் விநியோகம் செய்வதற்கு முன்னுரிமை வழங்குதல். இதன் மூலம் மூடா ஆறு மற்றும் பெரிஸ் அணையில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
* மலேசிய வடக்கு மாநிலங்களில் கூடுதலான செயற்கை மேகமூட்ட உருவாக்கம் செய்தல்.கடுமையான மழை பொழிவு நீர் அணை சேகரிப்பை அதிகரிக்கும்.