பசுமைக் கல்வித் திட்டத்தை அமல்படுத்த சமூகத் தோட்டம் உருவாக்கம்

Admin

ஜார்ச்டவுன் – பாயான் கிரீண்டெக் சென் பெர்ஹாட் எனும் தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சமூகத் தோட்டத் (The Kebun Kitar) திட்டமானது, நகர்ப்புற விவசாயம் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்கும் பொருட்டு அடுத்த மாதம் பசுமைக் கல்வித் திட்டத்தை நடத்த இலக்கு கொண்டுள்ளது.

பினாங்கு டிஜிட்டல் நூல்நிலையத்தில் நடைபெறும் இந்த திட்டத்தில் 30 பங்கேற்பாளர்கள் பங்கெடுப்பர். இதற்கு பதிவு முற்றிலும் இலவசம்.

பாயான் கிரீன்டெக் தோட்டக்கலை நிபுணர் டாக்டர் ஜெனிபர் கோயன் அவர்களின் கூற்றுப்படி, இந்த திட்டம் ஆகஸ்ட் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை வரை மாதத்திற்கு ஓர் அமர்வு என நடத்தப்படும், என்றார்.

“வீட்டில் செயல்படுங்கள்’, ‘சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒரு தோட்டம்’ மற்றும் ‘இயற்கையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ ஆகிய மூன்று முக்கிய கருப்பொருள்களின் அடிப்படையில் இப்பயிற்சியும் பட்டறையும் நடத்தப்படும்.

“இந்த திட்டத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்,” என்று பினாங்கு டிஜிட்டல் நூல்நிலையத்தில் நடைபெற்ற பசுமை திட்ட நிகழ்ச்சியின் துவக்க விழாவின் போது கோயன் இவ்வாறு கூறினார்.

பாயான் கிரீன்டெக் இயக்குனர் ஜிம்மி ஓங் கூறுகையில், பயிரிடுவது எளிது, ஆனால் அதனைப் பராமரிப்பது தான் கடினமாகும்.அதற்கான சரியான வழிகாட்டியை இந்தப் பட்டறை வழங்கும்.

“சமூக நகர்ப்புற விவசாய நிலைத்தன்மையை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ பொதுமக்களை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது.

“நாங்கள் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதால் எங்கள் விவசாய முறை இரசாயன பயன்பாடு அற்றது. இது சமூக நகர்ப்புற விவசாயம் தொடர்ந்து வளர துணைபுரியும்,” என ஓங் கூறினார்.

இதற்கிடையில், மாநில சமூகநலன் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ கூறுகையில், சமூகத்தின் ஆர்வமின்மை காரணமாக, நகர்ப்புற விவசாயத்தில் துரித வளர்ச்சி காண முடிவதில்லை.

“நகர்ப்புற விவசாயம் மேலும் வளர்ச்சியடைய ஒரு முறையான வழிகாட்டி இருக்க வேண்டும். எனவே, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து காலி நிலங்களும் நகர்ப்புற விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

“இந்த விஷயத்தில் ஊராட்சி மன்றங்களான பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி), செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மற்றும் PLANMalaysia@Penang (பினாங்கு நகரம் மற்றும் தேசிய திட்டமிடல் துறை) ஆகிய இரு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்,” என்று பீ மேலும் கூறினார்.

தொடக்க விழாவில் பினாங்கு பசுமைக் கவுன்சில் பொது மேலாளர் ஜோசபின் டான்; எமிகோ ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிர்வாகத் தலைவர் பிரான்சிஸ் லிம்; பாயான் கிரீன்டெக் குழு உறுப்பினர்கள்; பினாங்கு டிஜிட்டல் நூல்நிலைய மற்றும் சஹாபத் ஆலம் மலேசியாவின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.