பத்து காவான் – 2025ஆம் ஆண்டுக்கான அரசுத் தேர்வுகளில் சிறந்த சாதனைகளைப் படைத்த பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 453 மாணவர்களுக்கு சிறந்த மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி, மாணவர்களின் கல்வி முயற்சிகளைப் பாராட்டுவதுடன், அவர்கள் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான ஊக்கத்தையும் வழங்குவதாக பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதி சிறந்த மாணவர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், மாணவர்களின் கல்விச் சாதனைகளை அங்கீகரிப்பது மட்டுமன்றி, அவர்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து வெற்றியை நோக்கிப் பயணிக்க இந்த விருதுகள் ஊக்கமளிக்கும், என்றார்.

இந்நிகழ்ச்சியில், விருது பெற்றவர்களில் 375 பேர் ஆரம்பப் பள்ளி மாணவர்கள், மேலும் 29 பேர் படிவம் ஒன்று முதல் படிவம் நான்கு வரை பயிலும் மாணவர்கள் ஆவர்.
மேலும், மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வில் எட்டு ஏ அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற 44 மாணவர்களும், மலேசிய உயர் கல்விச் சான்றிதழ் (எஸ்.டி.பி.எம்) தேர்வில் 3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட ஒட்டுமொத்த தரப் புள்ளி சராசரியை (CGPA) பெற்ற ஐந்து மாணவர்களும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியைப் பெறுவதற்கும், அவர்களின் முழுத் திறனை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதில் மாநில அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக சாவ் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான பினாங்கின் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளைச் சுட்டிக்காட்டிய அவர், மொத்தம் 16,545 மாணவர்கள் தேர்வில் பங்கேற்ற நிலையில், அவர்களில் 92.26 விழுக்காட்டினர் சான்றிதழைப் பெறுவதற்குத் தகுதி பெற்றதாகக் கூறினார். இவர்களில் 725 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ பெற்றதுடன், 25 பேர் அனைத்துப் பாடங்களிலும் A+ பெற்றனர்.
மேலும், 2025ஆம் ஆண்டில் பினாங்கு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த எஸ்.டி.பி.எம் மாநில சராசரி CGPA-வான 2.99ஐப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 2.96 சராசரியைவிட அதிகமாகும்.
கல்விச் சாதனைகளுக்கு அப்பால், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கூடுதல் கல்வி ஆதரவை வழங்குவதிலும் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பினாங்கு கற்பித்தல் கார்னிவல் 2026இல், பினாங்கு இஸ்லாமிய அறக்கட்டளை மற்றும் பினாங்கு கல்வித் துறை இணைந்து, குறிப்பாக B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்தும் வகையில் தீவிர எழுத்தறிவுப் பயிற்சித் தொகுதியை அறிமுகப்படுத்தின.
அதுமட்டுமின்றி, குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைத்து, மாணவர்கள் கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்த உதவும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான மாநில கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதாக சாவ் தெரிவித்தார்.
விருது பெற்ற மாணவர்கள் தொடர்ந்து ஒழுக்கத்துடன் செயல்படுவதுடன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதித்து, தங்களது இலக்குகளை நோக்கித் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“சிறந்த தேர்ச்சி என்பது தேர்வு முடிவுகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. நற்பண்பு, ஒழுக்கம், மனிதநேய விழுமியங்கள் மற்றும் பிறருக்கு பயனளிக்கும் திறன் ஆகியவையும் முக்கியமானவை,” என்றார்.
எதிர்காலத்தில் மாணவர்கள் சமூகத்திற்கும், பினாங்குக்கும், நாட்டிற்கும் சிறந்த பங்களிப்பை வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு, மாநில வர்த்தகம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் கோ சூன் ஐக், முதலமைச்சரின் அரசியல் செயலாளர் லாவ் கெங் ஈ, செபராங் பிறை மாநகர் கழக (MBSP) கவுன்சிலர் ரேச்சல் தே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.