ஜார்ச்டவுன்: “வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களை ‘ஒரே மேசையில்’ ஒன்றிணைக்கும் ஆற்றலில்தான் மலேசியாவின் பலம் அடங்கியுள்ளது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

மலேசியா சுதந்திர நாடாக மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்வதே தேசிய தினம் என்றும், மலையாளி சமூகத்தின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடுவதே ஓணம் என்றும் குறிப்பிட்ட சாவ், இரு நிகழ்வுகளும் ஒவ்வொருவருக்கும் இடமும் பங்கும் உள்ள ஒரு சமூகத்தையும், நாட்டின் எதிர்காலத்தை அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாகத் தெரிவித்தார்.

“வெவ்வேறு பாரம்பரியங்கள். வெவ்வேறு அடையாளங்கள். ஆனால் ஒரே குடையின் கீழ் ஒரே எதிர்காலமும், நாம் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டிய மலேசியா இதுதான்,” என்றார்.
இந்த ஆண்டின் தேசிய தினக் கருப்பொருளான ‘மேன்மைமிகு மலேசியா : துய்க்கப்படும் வளப்பம்’, என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை என்பதை வலியுறுத்துவதாக சாவ் கூறினார்.

ஒவ்வொரு சமூகத்தையும் மதிப்பது, ஒவ்வொரு தலைமுறையினருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் ஒவ்வொரு மலேசியரும் தாங்கள் இந்த நாட்டின் ஓர் அங்கம் என்ற உணர்வைப் பெறுவதை உறுதி செய்வதும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
அமைதி, சமத்துவம், தாராள மனப்பான்மை மற்றும் பகிரப்பட்ட வளமை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஓணத்தின் உணர்வு, மலையாளி அமைப்பின் வரலாற்றிலும் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

1951ஆம் ஆண்டு பினாங்கில் மலையாளி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி ஓணத்தையும் ஹரிராயா ஹாஜியையும் இணைந்து கொண்டாடியதாகவும், அதனைத் தொடர்ந்து 1952ஆம் ஆண்டு சமாஜம் முறைப்படி நிறுவப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அதன் முதலாவது பொதுக்கூட்டம் நடைபெற்றதாகவும் சாவ் கூறினார்
“ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, நீங்கள் மலையாளி சமூகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாத்து வருவதுடன், கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரியத் திட்டங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் மூலம் பரந்த சமூகத்திற்கும் பங்களித்து வருகிறீர்கள்.
“இது, சமூகங்கள் தங்களது பாரம்பரியங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போதுதான் நமது பன்முகத்தன்மை மேலும் வலுப்பெறும்,” என்றார்.
பினாங்கின் பன்முகத்தன்மை என்பது திருவிழாக் காலங்களில் மட்டும் கொண்டாடப்படும் ஒன்றல்ல என்றும், அன்றாட வாழ்க்கையில் அண்டைச் சமூகங்கள், உணவு, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பல்வேறு சமூகங்களின் ஊடாக அது அனுபவிக்கப்படுவதாகவும் சாவ் குறிப்பிட்டார்.
சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும்
ஹர்மோனிக்கோ, பினாங்கு ஹர்மோனி கார்ப்ரேஷன்
உள்ளிட்ட தளங்களுக்கும் திட்டங்களுக்கும் மாநில அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என சாவ் தெரிவித்தார்.
இதனிடையே, மலையாளி அமைப்பின் தலைவர் சுமதி நாயர், இந்த டின் கொண்டாட்டக் கருப்பொருளான “Othruma”, அதாவது ஒற்றுமை, அமைப்பின் அடிப்படை நோக்கத்தையும் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான அதன் நீண்டகால முயற்சிகளையும் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.
தேசிய தினம் என்பது மலேசியர்கள் பெருமையுடன் தங்களது தாயகமாகக் கருதும் நாட்டை நினைவுகூரும் நாளாகும் என்றும், ஓணம் என்பது தங்களது வேர்கள், கலாசாரம் மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் பாரம்பரியங்களை நினைவூட்டும் திருநாளாகும் என்றும் அவர் கூறினார்.
“மலையாளி பாரம்பரியத்தைக் கொண்ட மலேசியர்களாக, மலேசியாவை எங்களது இல்லமாகக் கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எங்களில் பலர் இங்குதான் பிறந்தோம், இங்குதான் வளர்ந்தோம், எங்களது பிள்ளைகளை இங்குதான் வளர்க்கிறோம்; எங்களது வாழ்க்கையையும் இங்குதான் கட்டியெழுப்பியுள்ளோம், என்றார்.
இளைய தலைமுறையினருடன் அதிகளவில் தொடர்புகொள்வதில் NMMS சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய சுமதி, அவர்கள் தங்களது பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வதுடன், பெருமைமிக்க மலேசியர்களாக வளர்ந்து, நாட்டின் பல்வேறு கலாசாரங்களை மதித்துப் போற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மேலும், NMMS-ன் திட்டங்களை வலுப்படுத்தவும், சமூகத்துக்கும் இளைய தலைமுறையினருக்கும் மேலும் பல சேவைகளை வழங்கவும் பினாங்கு மாநில அரசு அமைப்புக்கு உதவிகளை விரிவுபடுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, அனைத்து மலேசிய மலையாளி சங்கம் (AMMA) தலைவர் டத்தோஸ்ரீ ஷைலா வி, ஒற்றுமைக்கான NMMS-ன் வலுவான அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், தேசிய தினத்தையும் ஓணத்தையும் அர்த்தமுள்ள வகையில் ஒன்றிணைத்து கொண்டாடியதற்கும் பாராட்டு தெரிவித்தார்.
மலேசியர்கள் தங்களது கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டே, மலேசியர்கள் என்ற அடையாளத்தையும் அரவணைத்துச் செல்ல முடியும் என்பதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.
.
பாரம்பரிய நிகழ்வுகளுடனும் ஓணம் சத்யா விருந்துடனும் குடும்பங்களும் சமூக உறுப்பினர்களும் ஒன்றுகூடி கொண்டாடிய இந்நிகழ்வு, மலேசியாவின் பன்முகத்தன்மை ஒற்றுமைக்கு ஒரு தடையல்ல; மாறாக, நாட்டின் மிகப் பெரிய பலங்களில் ஒன்றாகும் என்பதை மீண்டும் நினைவூட்டியது.
மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு ய் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.