பாகான் டாலாமில் புதிய தமிழ்ப்பள்ளி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் – பேராசிரியர்.

Admin

பாகான் டாலாம் – தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபைப் பறைச்சாற்றும் வண்ணமாகத் தமிழர் திருநாள் திகழ்கிறது. பொங்கல் விழா தமிழர் திருநாளாக அணுசரிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது. அண்மையில் பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மையம் ஏற்பாட்டில் ஜாலான் ஜெத்தி லாமாவில் ‘தமிழர் திருநாள்’ சிறப்பாக நடைபெற்றது. இத்தமிழர் திருநாள் இரண்டாவது ஆண்டாக தமிழர்களின் மரபினை பறைச்சாற்றும் வகையில் கொண்டாடப்பட்டது பாராட்டக்குரியதாகும்.
“பொங்கல் தமிழர் பண்பாட்டு விழா; இதனைக் கொண்டாடுவதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிப்பலிக்கிறது. அதுமட்டுமின்றி இக்கொண்டாட்டத்தில் பிற இன மக்களும் கலந்து கொள்வதன் மூலம் இவ்வட்டார மக்களுடையே நல்லிணக்கத்தைப் பேண முடியும். மேலும் தமிழர்களின் பண்டையக்கால நடனங்கள் மற்றும் விளையாட்டுகள் இடம்பெறுவதன் மூலம் அவர்களின் மரபுப் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் இளைய தலைமுறையினர் பண்டையக் கால நடனம் மற்றும் விளையாட்டுகளை அறிந்து கொள்ள வழி வகுக்கிறது,” என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி தமது வரவேற்புரையில் தெரிவித்தார்.

பொங்கல் கொண்டாட்டத்தில் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்

தொடர்ந்து அவர் கூறுகையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பிற மாநிலத்திலும் உருவாக்க வேண்டும். இவ்வாரியம் ஆலயங்கள் பாதுகாப்பதோடு அங்கு ஏற்படும் நிர்வாகம் மற்றும் இட பிரச்சனைகளையும் இந்து அறப்பணி வாரியம் சுமூகமாக கையாண்டு பிரச்சனைக்கு தீர்வுக் காணும். இது ஒரு சமூக சமய பாதுகாப்பு அமைப்பாகத் திகழும் என குறிப்பிட்டார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை தொடங்கி விட்டதாகவும் மக்கள் விரும்பும் வண்ணம் படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் மாநில மற்றும் மத்திய அரசு நிறைவேற்றும் என சத்தீஸ் தலைமையுரையில் இவ்வாறு சூளுரைத்தார்.

“இதனிடையே, பாகான் டாலாம் வட்டாரத்தில் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது; அவ்வாறு கட்டப்பட்டால் பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 29 தமிழ்ப்பள்ளிகள் இடம்பெறும். முன்னால் அரசு பள்ளி உரிமங்களை விட்டுக்கொடுத்த காரணத்தினால் தொடக்கத்தில் நம் நாட்டில் இருந்த 1,500 தமிழ்ப்பள்ளிகள் இன்று குறைந்து 526 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே இருக்கிறது”, என பொங்கல் கொண்டாட்டத்தை துவக்கி வைத்த பின்னர் தமதுரையில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி வருத்தமாகக் குறிப்பிட்டார்.

இக்கொண்டாட்டத்தில் உறி அடித்தல், பொங்கல் வைத்தல், கோலம் போடுதல், மற்றும் இதரப் போட்டிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் மதியம் மணி 3.00க்கு தொடங்கப்பட்ட இவ்விழா ஆடல் பாடல் என அற்புதமான கலை நிகழ்ச்சியுடன் நிறைவை நாடியது. தொன்று தொட்டு வரும் தமிழர்களின் பண்டைய நடனங்களான புலியாட்டம், மயிலாட்டம், சிலம்பம், கோலாட்டம், என வருகையாளர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.