பாகான் – நாட்டின் உத்வேகத்தை மையமாகக் கொண்ட ஒரு அறிவார்ந்த மற்றும் பசுமையான மாநிலத்தை நோக்கிய பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, பாகான் டாலாமில் முதல் முறையாக ‘பிக்கில் பால்’ மைதானம் (Pickleball) தொடக்க விழாக் காண்கிறது. இது விளையாட்டுத் துறையில் சுறுசுறுப்பாக இருக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும் ஒரு முயற்சியாக திகழ்கிறது.
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் இந்த ‘பிக்கில் பால் மைதானம்’ பாகான் டாலாமில் ஜிரான் ரெசிடென்சி மண்டபத்தில் அமைந்துள்ளது, என்றார்.
“பிக்கில் பால்’ விளையாட்டு அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ளது. தற்போது நம் நாட்டில் அனைத்து சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதி எப்போதும் முன்னணியில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
“எனவே, மாநில அரசு சமூக மேம்பாட்டு முயற்சிகளில் ஆரோக்கியமான மற்றும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கக்கூடிய ஒவ்வொரு விளையாட்டு நடவடிக்கையையும் ஆதரிக்கிறது.”
“உண்மையில், இது பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமை உணர்வை உருவாக்கும்,” என்று அண்மையில் நடைபெற்ற திறப்பு விழாவில் குமரன் இவ்வாறு கூறினார்.
பாகான் டாலாமில் முதல் உட்புற பிக்கில் பால் மைதானத்தை நிர்மாணிக்க ரிம30,000 நிதியுதவி வழங்கிய துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங்கிற்கு நன்றித் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன், CEO Professional Tools & Dies டத்தோ ஸ்டீவ் லீ சீ அவுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“இந்த விளையாட்டு அரங்கம் வெறும் கட்டிடமல்ல, அனைத்து இனம் மற்றும் வயதுடையோருக்கான ஆரோக்கியமான இடத்தை வழங்குவதற்கான எங்களது முயற்சியின் சின்னமாகும். பிக்கில் பால் விளையாட்டு எளிமையானது, பாதுகாப்பானது, எல்லோராலும் விளையாட முடியும். இது பாகான் டாலாம் மக்களின் வாழ்க்கை முறையில் விளையாட்டை ஒரு பகுதியாக மாற்றும் முயற்சியாக அமைகிறது.

“இந்த முயற்சி சமூக ஒற்றுமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிய ஒரு முன்முயற்சி திட்டமாகும். துடிப்பான, ஒன்றுபட்ட மற்றும் முற்போக்கான சமூகத்தை உருவாக்க இந்த மைதானத்தை நாம் பொறுப்புடன் பயன்படுத்துவோம்,” என நம்பிக்கை தெரிவித்தார்.