பாலிக் புலாவ் சமூகக் கலைக்கழகம்

கல்வி சார்ந்த திட்டத்தை மேற்கொள்வதில் மக்கள் கூட்டணி அரசு ஒரு போதும் தவறியதில்லை. அவ்வகையில், அண்மையில் பாலிக் புலாவ் மாவட்டத்தில் சமூக் கலைக்கழகம் ஒன்று மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் அவர்களால் திறப்பு விழாக் கண்டது. ஒரு நாட்டின் சமுதாய வளர்ச்சிக்கும் நல்வாழ்க்கைக்கும் அடித்தளமாக விளங்குவது கல்வி ஒன்றே. அதனைக் கருத்தில் கொண்டே பாலிக் புலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய யுஸ்மாடி யுசோஃப் இந்தக் கலைக்கழகத்தை உருவாக்கியிருப்பதாகத் தமது வரவேற்புரையில் கூறினார். இக்கழகம் பாலிக் புலாவ் மக்களுக்கு ஒரு கல்வி மையமாகத் திகழ்வதுடன் வசதி குறைந்த மக்களுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தளமாக விளங்கும் என்றும் கூறினார்.

வயது, இனம், அரசியல் பின்னணி யாவையும் பாராமல் வசதி வாய்ப்பற்ற அனைத்துத் தரப்பினரும் பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கலைக்கழகம் பாலிக் புலாவ் மக்களை மேன்மையுறச் செய்யும் என முதல்வர் நம்பிக்கைத் தெரிவித்தார். இக்ககலைக்கழகம் இலவச இணையச் சேவை, மேற்கோள் நூல்கள், படிக்க ஏற்ற இடங்கள் ஆகிய கல்வி வசதிகளை உள்ளடக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மக்களுக்குக் கருத்தரங்கு, பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை ஏற்று நடத்த ஏதுவாக மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. வசதி வாய்ப்பற்ற மக்கள் தங்கள் அறிவாற்றலைப் பெறுக்கிக் கொள்ள சிறந்த தளத்தை அமைத்துக் கொடுத்துள்ள யுஸ்மாடி யுசோஃப் அவர்களுக்கு முதல்வர் தமது வாழ்த்தினையும் பாரட்டினையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், பாலிக் புலாவ் மக்கள் காலம் பொன் போன்றது என்பதை உணர்ந்து அதனை வீண் செய்யாமல் இந்தக் கலைக்கழகத்தை  சிறந்த முறையில் பயன்படுத்தி கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

32313_543343529016435_55890753_n

   பாலிக் புலாவ் கலைக்கழகத்தின் ஒரு பகுதியைப் படத்தில் காணலாம்.

 

‘MGS Sdn Bhd’ என்னும் தனியார் நிறுவனம் ஒன்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இக்கலைக்கழகத்திற்கு ரிம 5000 நிதியுதவி வழங்கி முதல்வரின் பாராட்டைப் பெற்றது. மேலும், இச்சமூக கலைக்கழகத்தின் சார்பில் பாலிக் புலாவ் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டன. அதனைப் பெற்றுக் கொண்ட ஈஸ்வரன் த/பெ மாரியப்பன், தேவி பிரவினா த/பெ தியாகராஜன் ஆகிய இரு இந்திய மாணவர்களும் தங்களின் உள்ளக்களிப்பை வெளிபடுத்தினர். இவ்வுதவித்தொகைத் தங்களின் பள்ளிச் செலவுகளுக்கு மிகுந்த உதவியாக அமையும் எனவும் கல்வியில் சிறந்து விளங்க இக்கலைக்கழகத்தை தாங்கள் முழுமையாகப் பயன்படித்திக் கொள்ளப் போவதாகவும் கூறினர்.