ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அண்மையில் காவடி எடுக்கும் விதிமுறைகள் குறித்த பட்டறையை (KAVADI RITUAL WORKSHOP) ஏற்று நடத்தியது. இந்தப் பட்டறை இந்து சமயத்தின் அடிப்படையில் காவடி எடுக்கும் பக்தர்களுக்குக் கல்விப் புகட்டுவதை நோக்கமாகக் கொண்டு வழிநடத்தப்பட்டது. இது பினாங்கில் இந்து சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பினாங்கு தைப்பூசக் கொண்டாட்டத்தில் எடுக்கப்படும் ஒரு சில காவடிகளின் வடிவமைப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்பாக சமூக ஆர்வாளர் ஜெஸ் நாயர் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திடம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பரிந்துரையை முன் வைத்தார்.
பினாங்கில் இந்தியர்களின் குறிப்பிடத்தக்க கொண்டாட்டமான தைப்பூசத்தில் பக்திநெறியுடனும் ஆகாம முறையுடனும் நேர்த்திக்கடனை செலுத்த இந்தப் பட்டறையில் காவடி எடுக்கும் விதிமுறைகள் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர் இராமதாசர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற காவடி எடுக்கும் பட்டறையை தொடங்கி வைத்து தமதுரையில் இவ்வாறு கூறினார்.
மேலும் பேசுகையில், இந்த முன்முயற்சி திட்டம் ஆன்மீக ஒழுக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், பக்தர்களிடையே காணப்படும் பல்வேறு நம்பிக்கைகளை ஒரு பொதுவான புரிதல் மற்றும் நோக்கத்தின் கீழ் ஒன்றிணைக்கிறது என இராயர் தெரிவித்தார்.
அத்தினத்தன்று, இந்தப் பட்டறையுடன் இணைந்து, காவடி தொடர்புடைய எந்தவொரு மதச்சார்பற்ற அல்லது பொருத்தமற்ற நடைமுறைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் தடுப்பதற்கும் ‘சிறப்புப் பணிக்குழுவை’ பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
மேலும், காவடி எடுக்கும் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதில் இந்த நடவடிக்கை முக்கியமானது என பினாங்கு இந்து அறப்பணி வாரியத் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அரசு சாரா இயக்க தலைவர்கள், சமூக ஆர்வாளர்கள், ஆலயத் தலைவர்கள் என முதல் பத்து பேர்களுக்கு இந்த சிறப்புப் பணிக்குழுவிற்கான பெயர் அட்டை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இக்குழுவில் மேலும் 30-க்கும் மேற்பட்டோர் செயல்படுவர். பினாங்கில் கொண்டாடப்படும் தைப்பூசம், சித்திரை பௌர்ணமி போன்ற கொண்டாட்டங்களில் காவடிகள் எடுப்பது வழக்கம். அக்காவடிகள் ஆகம விதிகளுடனும் சமய நெறியுடனும் இருப்பதை உறுதிச்செய்ய இந்தச் சிறப்புப்பணி குழு செயல்படும்.
பினாங்கில் இந்து மதத்தின் முக்கிய மதிப்புகளைப் பாதுகாப்பதில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உறுதியாக உள்ளது. பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நோக்கம் அனைத்து இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகளிடையே ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில், முறையான மத நடைமுறைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அனைத்து தரப்பினருடனான கூட்டு முயற்சியுடன், நம் நம்பிக்கை மற்றும் பாரம்பரியம் எதிர்கால தலைமுறைகளுக்கு மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நிலைநிறுத்தப்படுவதை உறுதிசெய்ய தொடர்ந்து பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பாடுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.