மத்திய அரசு முடித் திருத்தும் நிலைய செயல்பாடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முதல்வர்

ஜார்ச்டவுன் – மத்திய அரசு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முடித் திருத்தும் நிலைய செயல்பாடு குறித்து மறுபரிசீலனைச் செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்கிய ஒன்பது (9) உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் செயல்பாடுகளில் முடித் திருத்தும் நிலையமும் இடம்பெறுகிறது. மாநில அரசு பொது மக்களின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கி மத்திய அரசு அறிவித்த இந்த 9 சேவைத்துறைகள் செயல்பாடுகளில் சில துறைகளுக்கு அனுமதி மறுப்பதற்கு முழு உரிமை உண்டு,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் முகநூல் நேரலையில் கூறினார்.

பிரதமர் அறிவித்த மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் முடித் திருத்தும் நிலையத்தில் அடிப்படை முடித் திருத்தும் சேவை அனுமதிக்கப்பட்டாலும் இன்று நடைபெற்ற மாநில அரசு பாதுகாப்பு சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் இதன் விளைவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. முடித் திருத்தும் நிலையம் திறப்பதற்கு 95 விழுக்காடு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சமூக இடைவெளி அடிப்படையிலும் கோவிட்-19 புதியக் குழுத் தொற்று உருவாக்கம் காண வாய்ப்பு உள்ளதாலும் இது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் , மத்திய அரசாங்கம் அறிவித்த ஒன்பது (9) உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் செயல்பாடு அனுமதி தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிலிருந்து கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டல் பெறும்வரை மாநில அரசு காத்திருக்கும், என்றார்.

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விவசாயம் சார்ந்த பொருட்கள் (உரங்கள்/ விஷங்கள் ) விற்பனை; வளர்ப்புப் பிராணிகள் உணவு மற்றும் மருந்துகள் விற்பனை; மற்றும் வன்பொருள் விற்பனை கடைகள் முன்னதாக அறிவிக்கப்பட்ட காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையிலான சேவை தற்போது மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இக்கடைகள் வாரத்தில் இரண்டு நாள் (திங்கள் & வியாழன் ) கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும்.

மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் மாநில சுகாதாரத் துறை பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் இந்தக் கிருமி பரவலைத் தடுக்க முடியாது என்றும், பொது மக்கள் சுய பாதுகாப்புக் கூறுகளைப் பின்பற்றுவதன் மூலம் இதன் தாக்கத்திலிருந்து விடுப்படலாம் என குறிப்பிட்டார்.
தற்போது மத்திய அரசாங்கம் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (ஏப்ரல் 15-28) அறிவித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் பொறுமையுடன் ஆணையைப் பின்பற்றி கோவிட்-19 தொற்றுக் கிருமியின் சங்கிலி தொடர்ச்சியை முற்றாக அழிக்க வேண்டும், என வலியுறுத்தினார்.
இந்த ஆணையின் தொடர்ச்சியால், அனைத்து சமூகங்களின் நலனுக்காக குறிப்பாக பொருளாதாரம், உணர்வு, சமூகநலன் ஆகிய கூறுகளின் அடிப்படையில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ளது.

மாநில அரசு வாக்குறுதி அளித்தது போல் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி வரை 1.3மில்லியன் முகக் கவசங்கள் குறிப்பாக முன் வரிசை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் விநியோகித்துள்ளது. மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் கட்டம் கட்டமாக பொது மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, மாநில அரசு தினசரி அடிப்படையில் தன்னிலை பாதுகாப்பு உபகரணங்கள் (ஆடை, முகக் கவசம்); கைத் தூய்மிகள், வெப்பமானி, கையுறைகள் மற்றும் காலுறைகள் மொத்தமாக 330,352 யூனிட்கள் கொடுக்கின்றன. எனவே, முன் வரிசை வீரர்கள் தங்களின் கடமையை அச்சமின்றி ஆற்ற வழிவகுக்கும்.
பினாங்கு வாழ் பொது மக்கள் இணைய வழி முகக் கவசங்கள் கொள்முதல் செய்வதற்கு முன்பு அந்நிறுவனம் குறித்து நன்கு ஆராய வேண்டும். ஏனெனில், மலேசிய காவல்துறை கடந்த ஜனவரி 30 முதல் ஏப்ரல் 9 வரை பினாங்கின் ஐந்து மாவட்டங்களில் மட்டுமே 60 இணைய வழி மோசடி வழங்குகள் பதிவுச்செய்யப்பட்டதாக புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது. இந்த வழக்குகளில் ரிம 466,496.00 மோசடி ஏற்பட்டுள்ளன.


மாநில அரசு வீடற்ற 39 நபர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி முதல் கொம்பலெக்ஸ் மஸ்யாராகாட் பெந்யாயாங் வளாகத்தில் அவர்களுக்குத் தற்காலிக தங்கும் வசதி, உணவு மற்றும் சுகாதாரப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றது. இது மாநில அரசின் சமூகநல மாண்பினையும் கோவிட்-19 தொற்று கிருமி பரவலைத் தடுக்கும் அணுகுமுறையாகவும் கருதப்படுகிறது.