பினாங்கில் நாளை முதல் பி.கே.பி.பி அமல்படுத்தப்படும் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு இணங்க, பினாங்கு மாநிலத்தில் வணிக மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கான மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை(பி.கே.பி.பி) நாளை முதல், (ஜூன்,10) செயல்படுத்தப்படும்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் மாநில பாதுகாப்புச் சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் (ஜே.கே.கே.என்) கலந்த கொண்ட பின் முகநூல் நேரலையில் இவ்வாறு அறிவிப்புச் செய்தார்.

மத்திய அரசாங்கத்தின் அறிவிப்புக்கு ஏற்ப தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள பிற துறைகளும் கட்ட கட்டமாகத் திறக்கப்படும்.
“மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவிற்கு ஜே.கே.கே.என் தலைமை தாங்குவதோடு, அண்மையில் பிரதமர் அறிவித்த ஏழு முக்கிய பி.கே.பி.பி திட்டங்கள் மற்றும் இயல்பாக்கம் செயல்படுத்த துணைபுரியும். அதோடு, இந்த ஏழு பிரதான திட்டங்கள் மாநில அளவில் ஒன்றிணைந்து மற்றும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும்.

“பொது சுகாதார தொழிலாளர் மேம்பாடு; எல்லைக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல்; சமூக பொறுப்பை வலுப்படுத்துதல்; புதிய இயல்பு பழக்கத்தைப் பின்பற்றுதல்; சட்டம் மற்றும் அமலாக்கம்; பொருளாதாரத் துறை செயல்படத் தொடங்குதல்; பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்தல்,” என எழு திட்டங்களின் சாரங்களை விளக்கமளித்தார்.

மேலும், பினாங்கு வாழ் மக்கள் தொடர்ந்து நல்லொழுக்கத்தை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு (எஸ்.ஓ.பி) ஏற்ப சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், சோப்புடன் கைக்கழுவுதல் மற்றும் கோவிட்-19 தாக்கத்தை உணர்ந்து செயல்படுதல் போன்ற இந்த 4பி நடைமுறைகளும் பின்பற்றுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

பினாங்கு ஜே.கே.கே.என் கூட்டத்தின் தலைவரான கொன் யாவ், பி.கே.பி.பி-யின் ஆணையை பினாங்கு நிராகரித்ததாக கூறும் பாதுகாப்பு மூத்த அமைச்சரின் குற்றச்சாட்டுகளையும் முகநூல் நேரலையில் மறுப்புத் தெரிவித்தார்.

முதல்வர் கூறுகையில், மத்திய அரசு விதித்துள்ள எந்தவொரு சட்டத்திட்டங்களையும் பினாங்கு மாநில அரசு மீறியதில்லை மற்றும் நடைமுறைப்படுத்த தவறியதில்லை என்றார் .

“கடந்த ஜூன் 7, 2020 அன்று பிரதமர் அறிவித்தப்படி பினாங்கில் பி.கே.பி.பி செயல்படுத்தப்படும் என்று தனது செய்தி அறிவிப்பில் தெளிவாகக் கூறினேன், என்றார்.

“இது பொது சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலை அடைவதற்கான முயற்சியாக விளங்குகிறது. கோவிட்-19 தாக்கத்திற்குப் பின் இயல்பிநிலைக்கு மாறுவதற்கு பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி மற்றும் மதத் துறைகளை படிப்படியாக செயல்படுத்தப்படும் என மேலும் தெரிவித்தார்.

மாநில அரசு தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் செயல்படுவதாக நில விவகாரங்கள் மற்றும் நில மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினரான கொன் யாவ் கூறினார்.

“பினாங்கின் தொழில்துறை மீண்டும் மேம்பாடு காண கால அவகாசம் தேவைப்பட்டாலும் தற்போது அத்துறை இயல்புநிலைக்கு படிப்படியாகத் திரும்பி வருகிறது.

“கடந்த பிப்ரவரி மாதம் தேசிய வேலையில்லா எண்ணிக்கை 3.3 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாக (மார்ச் 2020) அதிகரித்திருந்தாலும், பினாங்கில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள முதலீட்டுகளின் அடிப்படையில் 18,886 உயர் மதிப்புள்ள வேலை வாய்ப்புகள் இடம்பெறும் என மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (MIDA) அறிவித்தது,” என முதல்வர் சுட்டிக்காட்டினார்.