ஜார்ச்டவுன்: பினாங்கு மருத்துவ சுற்றுலா மையத்தின் (PMED) தரவுகளின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டில் பினாங்கில் சிகிச்சை பெற்ற வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 418,608 பதிவானது. . இதன் மூலம் ரிம898,070,127 வருமானம் ஈட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகள் மாநிலத்தில் உள்ள 16 தனியார் மருத்துவமனைகளை உள்ளடக்கியவை என்று சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 25.94% அதிகரித்து 527,176 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், மருத்துவ சுற்றுலா வருமானமும் 26.60% அதிகரித்து ரிம1,136,924,434 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை நடைபெற்ற 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் நான்காவது தவணையின் முதல் கூட்டத்தில், பத்து லஞ்சாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஓங் ஆ தியோங் கேட்ட வாய்மொழிக் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
மருத்துவ சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான உத்தி குறித்து கருத்து தெரிவித்த வோங் ஹோன் வாய், வெளிநாடுகளில் இருந்து அதிக மருத்துவ சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக மலேசிய மருத்துவ சுற்றுலா ஆண்டு (MYMT) 2026 முன்னிட்டு, விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட முயற்சிகளில் ‘போர்டிங் பாஸ்’ சிறப்புரிமைகள் மூலம் ஏர் ஆசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பும் அடங்கும் என்று அவர் கூறினார்.
“மலேசியாவிற்கு வெளியே இருந்து போர்டிங் பாஸ்களை வைத்திருக்கும் பயணிகள், வெளிநாட்டு கடவுச்சீட்டையும் வைத்திருந்தால், சுகாதாரப் பரிசோதனை தொகுப்புகளில் 15% தள்ளுபடியைப் பெறலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் 2025 அக்டோபர்,1 2 முதல் 2026 டிசம்பர்,31 வரை அமலில் இருக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
அவரது கூற்றுப்படி, ‘kod Quick Response Indonesian Standard’ (QRIS) குறியீட்டைப் பயன்படுத்தி, நோயாளியின் சொந்த நாட்டு நாணயமான இந்தோனேசிய ரூபாயில் பணம் செலுத்தும் வசதியும், பணம் செலுத்தும் முறைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் வோங் ஹோன் வாய் மேலும் கூறியதாவது, இந்தோனேசியாவின் மேடான், ஆச்சே, ஜகார்த்தா, சுரபாயா, மியான்மரின் யாங்கூன் மற்றும் பல ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட மருத்துவ சுற்றுலா முக்கிய சந்தைகளுக்கான விமான இணைப்புகளும் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.