பினாங்கு இந்தியர் சங்கத்தின் சமூகநல திட்டங்கள் தொடரட்டும் – பேராசிரியர்

Admin

பினாங்கு இந்தியர் சங்கம் இந்தியர்களின் சமூகம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக பல அரிய திட்டங்களை மேற்கொண்டு வருவது சாலச்சிறந்தது என ஏழாவது முறையாக இச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற அனைத்துலக உதைப்பந்தாட்டம் (SOCCER) போட்டியை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்த பின்னர் தமது சிறப்புரையில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு குறிப்பிட்டார். இந்த அனைத்துலக உதைப்பந்தாட்டப் போட்டி பாடாங் போலோ திடலில் இனிதே நடைபெற்றது.

அனைத்துலக உதைப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

 

இந்த ஆண்டு  உதைப்பந்தாட்டப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள 25 இந்தியர் சங்கங்கள் மற்றும் இயக்கங்கள் பங்கெடுத்தன; இதில் மூன்று குழுக்கள் ஆஸ்ரேலியா, சிங்கப்பூர் மற்றும் இண்தோனேசியாவில் இருந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த  விளையாட்டுப் போட்டியின் முக்கிய நோக்கம் அனைத்து இந்திய சங்கங்களும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக சமூக மேம்பாட்டிற்குப் பாடுப்படவும் நட்புறவை மேம்படுத்தவும் வழிவகுக்கும். இதனிடையே, இப்போட்டியில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

நிகழ்வில் வரவேற்பு உரையாற்றிய இரண்டாம் துணை முதல்வர் 95-ஆண்டுகளாக இந்தியர் சங்கம் இந்தியர்களின் மேம்பாட்டிற்கு அயராது பாடுப்பட்டு வருவதை மனதார பாராட்டினார். இன்னும் வரும்காலங்களில் இந்தியர் சங்கம் சிறந்த திட்டங்களை இந்திய சமுதாயத்திற்கு வழங்கும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார். இம்மாதிரியான  விளையாட்டுப் போட்டிகளின் வழி சமூக ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை மேலோங்க செய்ய முடியும் என வலியுறுத்தினார்.

 

மேலும், அத்தினத்தன்று உடல்பேறு குறைந்த இருவருக்கு மூன்று சக்கர நாற்காலியும் பரிசுப்பொருட்களும் பேராசிரியர் எடுத்து வழங்கினார். இதனிடையே, இந்த அனைத்துலக உதைப்பந்தாட்டப் போட்டிக்கு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் மானியம் வழங்கி உதவிக்கரம் நீட்டினார் என்றால் மிகையாகாது.