பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் 14-வது முறையாக மும்மொழிப் போட்டி

கடந்த 29-9-2013-ஆம் நாள் 14-வது முறையாக பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் மும்மொழிப் போட்டி இனிதே நடைபெற்றது. இப்போட்டி போ தே தனியார் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. “மொழிகளின் வளமை வாழ்க்கையின் செழுமை” என்ற கருப்பொருளோடு  மலாய், ஆங்கிலம், தமிழ்மொழி ஆகிய மும்மொழிகளிலும் இப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பினாங்கு மாநில 28 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் சேர்ந்து பங்கேற்பது சாலச்சிறந்ததாகும்.

நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு கணபதி, முதலாம் முதல்வர் டத்தோ முகமது ரஷிட் பின் அஸ்னோன், பினாங்கு இந்தியர் சங்கத் தலைவர் திரு ஆனந்த கிருஷ்ணன் நாயுடு (இடமிருந்து வலம்)
நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு கணபதி, முதலாம் முதல்வர் டத்தோ முகமது ரஷிட் பின் அஸ்னோன், பினாங்கு இந்தியர் சங்கத் தலைவர் திரு ஆனந்த கிருஷ்ணன் நாயுடு (இடமிருந்து வலம்)

மும்மொழிப் போட்டி விழாவை பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் பின் அஸ்னோன் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். கல்வி என்பது மாணவர்களின் இரு கண்களுக்குச் சமமாகக் கருத வேண்டும் எனக் கூறிய முதலாம் முதல்வர் ரிம3000-ஐ மாநில அரசு சார்பில்  நன்கொடையாக வழங்குவதாக வரவேற்புரையில் தெரிவித்தார். பினாங்கு இந்தியர் சங்கத் தலைவர் திரு ஆனந்த கிருஷ்ணன் நாயுடு மாநில முதலாம் துணை முதல்வருக்குப் பொன்னாடைப் போற்றி மாலை அணிவித்துக் கொளரவித்தார்.

 

இந்த மும்மொழிப் போட்டியில் ஏழு வகை போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கட்டுரை எழுதும் போட்டி, கதை போட்டி, தமிழ் எழுச்சிப் பாடல் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் பல போட்டிகள் இடம்பெற்றுள்ளன. திருக்குறளின் மாண்பினை மாணவர்களிடையே வளப்படுத்தும் பொருட்டு திருக்குறளின் கருத்தை மையமாக வைத்து மலாய் மொழியில் பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் கூறும் நற்பண்புகளை மையமாக வைத்து தமிழ்மொழியில் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளின் வாயிலாக இலை மறை காயாக மறைந்திருக்கும்  மாணவர்களின் மொழித்திறன், பேச்சுத்திறன் மற்றும் எழுத்தாற்றலை வெளிப்படுத்தப்படுகிறது. இப்போட்டிகளின்  வாயிலாக தமிழ்ப்பள்ளி மாணவர்களைச் சிறந்த பேச்சாளர்களாகவும், பாடகர்களாகவும், கட்டுரை படைப்பாளர்களாவும் உருவாக்கப்படுகின்றனர் என்றால் மிகையாகாது.

கடந்த ஆண்டு முதல் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7A பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு விருது வழங்கும் நிகழ்வும் இவ்விழாவும் இடம்பெறுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் 46 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் பி.எம்.ஆர், எஸ்.பி.எம் மற்றும் எஸ்.தி.பி.எம் ஆகிய அரசு உயர் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற 14 மாணவர்களும் அங்கீகரிக்கப்பட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்மொழிப் போட்டியில் இராம கிருஷ்ணா தமிழ்ப்பள்ளியே முதல் இடத்தைத் தட்டிச் சென்ற வேளையில் இவ்வாண்டு மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி வெற்றி வாகைச் சூடியது பாராட்டக்குறியதாகும்.

இப்போட்டிக்குப் பல ஆண்டுகளாக வற்றாத ஆதரவு வழங்கும் மாநில அரசு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு கணபதி அவர்கள். மேலும் மாநில அரசு பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் 80 இலட்சம் ஒதுக்கியுள்ளதோடு என்றும் ஊன்று கோலாய் விளங்கும் என மாநில இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

கதை போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்
கதை போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்