பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வெள்ளி இரத ஊர்வலத்தை ஏற்று நடத்தும் – பேராசிரியர்

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தனசேகரன் மற்றும் இந்து அறப்பணி வாரிய தலைமை நிர்வாக அதிகாரி இராமசந்திரன்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தனசேகரன் மற்றும் இந்து அறப்பணி வாரிய தலைமை நிர்வாக அதிகாரி இராமசந்திரன்.

அடுத்தாண்டு முதல் பினாங்கு தைப்பூச கொண்டாட்டத்தின் போது, பினாங்கு இந்து அறப்பணி வாரிய சார்பில் மற்றுமொரு வெள்ளி இரத ஊர்வலம் தண்ணீர்மலை முருகனை நோக்கி புறப்படும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் அதன் தலைவரும் பினாங்கு இரண்டாம் துணை முதல்வருமான பேராசிரியர் ப.இராமசாமி. பினாங்கு தைப்பூசத்தின் முதன்மை நிகழ்வான வெள்ளி இரத ஊர்வலத்தை கடந்த 180 ஆண்டுகளாக பினாங்கு நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய நிர்வாகம் ஏற்று நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
பத்துமலை, ஈப்போ கல்லுமலை என அனைத்து முருகன் திருத்தலங்களிலும் தைப்பூசம் கொண்டாட்டத்தின் போது சம்மந்தப்பட்ட ஆலய நிர்வாகங்களே இரத ஊர்வலத்தை நடத்துகின்றனர். இதுவே, தைப்பூசத்தின் மரபு என்பதால் இனி வரும் காலங்களில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இரத ஊர்வலத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறினார் இரண்டாம் துணை முதல்வர். அரசு சாரா இயக்கங்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் வலியுறுத்தலுக்கு இணங்க இம்முடிவு எடுக்கப்பட்டதாக மேலும் அவர் தெளிவுப்படுத்தினார்.
இதனிடையே, இச்செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் சம்மந்தப்பட்ட சமூகத்தினர் இந்த இரத ஊர்வலத்தை போட்டியாக கருதாமல் இந்து அறப்பணி வாரியத்துடன் ஒத்துழைப்பு நல்கி 2017-ஆம் ஆண்டின் தைப்பூசக் கொண்டாட்டம் சிறப்பாக அமைய துணைபுரிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தைப்பூச செலவினங்களை இந்து அறப்பணி வாரியம் ஏற்று நடத்தும் வேளையில் இரத ஊர்வலத்தை இவ்வாரியமே நடத்துவதுதான் சாத்தியம் என குறிப்பிட்டார்.
மேலும், இவ்வாண்டு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலய தைப்பூச வசூல் ரிம 188,814.70 மற்றும் 137.85கிராம் தங்க நகைகளும் கிடைக்கப்பட்டன. உண்டியல் வசூல் அனைத்தும் கொம்தார் அலுவலகத்தில் தொண்டர்களால் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வசூல் கணக்குகள் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்