ஜார்ச்டவுன் – மலேசியாவில், வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை தொடர்ச்சியாக வழங்கும் முதல் மாநிலமாக பினாங்கு திகழ்கிறது. அதேசமயம், ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் ஸ்மார்ட் போர்டு வசதி வழங்கியுள்ள நாட்டின் முதல்மாநிலமாகவும் பினாங்கு திகழ்கிறது.
இன்றுவரை, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், கணினி ஆய்வகங்களின் வழங்கல், கல்வி மற்றும் டிஜிட்டல் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள், பினாங்கில் தமிழ்ப்பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாது, தேசிய அளவில் சிறுபான்மை சமூகங்களுக்கான கல்வி நிர்வாகத்தில் வெற்றிகரமான ஒரு முன்மாதிரியாகவும் உருவாகச் செய்துள்ளன.
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழு, இந்த மாற்றத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

வீடமைப்பு மற்றும் சுற்றுசூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும், தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசனின் வாய்மொழிக் கேள்விக்குப் பதிலளிக்கும்போது இதனைத் தெரிவித்தார்.
பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழு, இம்மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நில உரிமை பிரச்சனைகள் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதும், கல்வியின் செயல்திறனை மேம்படுத்துவதும் அதன் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இக்குழு மாநில மானியங்கள் மற்றும் சிறப்பு நிதிகள் ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்கு பொறுப்பேற்று செயல்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், பயிற்சி மற்றும் பாடநெறிகள், பள்ளி உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பல்வேறு கற்றல் தேவைகளை உள்ளடக்கிய 28 தமிழ்ப்பள்ளிகள் மற்றும் 14 பாலர் பள்ளிகளுக்கு மொத்தம் ரிம2.3 மில்லியன் நிதி வழங்கப்பட்டது.
“21 ஆம் நூற்றாண்டு கற்றலை (PAK21) செயல்படுத்துவதை வலுப்படுத்த, கழிப்பறைகள், கூரைகள், வகுப்பறைகள், பாலர்பள்ளிகள் வகுப்புகளை மேம்படுத்துதல், ஸ்மார்ட் போர்டு வசதிகள் மற்றும் டிஜிட்டல் கற்பித்தல் உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பள்ளிகளின் அடிப்படைத் தேவைகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது,” என டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.
மேலும், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சமூக நலன் பராமரிப்பு குறித்து கேட்ட வாய்மொழிக் கேள்விக்கு,
இந்தக் குழு குறைந்த வருமானம் பெறும் (B40) மாணவர்களுக்குப் புத்தகங்கள், பள்ளிப் பொருட்கள் மற்றும் கற்றல் பொருட்கள் வடிவில் உதவிகள் வழங்குகிறது என தெரிவித்தார்.
இக்குழுவின் வழிகாட்டலில், கல்வி மட்டுமன்றி விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி, கடந்த 2025 ஏப்ரல்,12 அன்று முதல் முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.