ஜார்ச்டவுன் – இன்று நடைபெற்ற பினாங்கு மாநில சட்டமன்றத்தின் தொடக்க அமர்வில், புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பதாவது பினாங்கு மாநில ஆளுநரான துன் டத்தோ ஸ்ரீ உத்தமா ரம்லி ஙா தாலிப் மக்களிடம் தம்முடைய மனமார்ந்த நன்றியையும், நேர்மை மற்றும் தொலைநோக்குடன் பினாங்கு மக்களுக்கு சேவை செய்யும் உறுதிபாட்டினையும் வெளிப்படுத்தினார்.
மேலும், மாட்சிமை தங்கிய பேரரசர் அவர்களுக்கு, தம்மை பினாங்கு மாநிலத்தின் உயரியப் பதவிக்கு கடந்த மே,1 முதல் நியமித்ததற்காக தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். “இந்த நியமனம் ஒரு பெருமை மட்டுமல்ல; இது மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் ஆற்றும் சேவையின் பொறுப்பைச் சித்தரிக்கிறது.
“கடவுளின் அருளால், நான் இந்த பொறுப்பை முழுமையான அர்ப்பணிப்புடன் ஏற்று, கூட்டரசு சட்டத்தையும் மாநில அரசியலமைப்பையும் மதித்து செயல்படுவேன்,” என்றார்.
துன் ரம்லி, மலேசியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த துன் அப்துல்லா அஹ்மட் படாவி அவர்களின் பணிகளை நினைவுக் கூறுமாறு சட்டமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். நாட்டின் மேம்பாட்டில் அவர் வழங்கிய பங்களிப்புகள் மிகவும் பாராட்டத்தக்கவை என அவர் புகழாரம் சூட்டினார்.
அவரது நினைவாக, மாநில அரசாங்கம் பண்டார் காசியா நெடுங்சாலையை “ஜாலான் துன் அப்துல்லா அஹ்மத் படாவி” என மாற்றியிருப்பதை துன் ரம்லி பாராட்டினார். இது மாநிலத்தின் ஆழமான மரியாதையும் மற்றும் நிலையான நன்றியுணர்வையும் பிரதிபலிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
துன் ரம்லி, முன்னாள் மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தமா அமாட் ஃபுஸி அப்துல் ரசாக் அவர்களின் மாநிலத்திற்கான மிகச் சிறந்த தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் குறித்து நன்றித் தெரிவித்தார்.
தமது உரையின் போது, பினாங்கு மாநிலத்தின் பொருளாதார செயல்திறன், 2023ஆம் ஆண்டு மாநிலத்தின் பொருளாதாரம் 3.3% வளர்ச்சி அடைந்ததாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரிம116 பில்லியன் ஆக உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வளர்ச்சியின் பெரும் பங்கு சேவைத் துறை (48%) மற்றும் உற்பத்தி துறை (46.5%)* ஆகியவற்றை சார்ந்தவை என்பதையும் அவர் குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலம் ரிம788.1 பில்லியன் வர்த்தகப் பரிவர்த்தனையைப் பதிவு செய்துள்ளது.
இது 2023 ஆண்டைக் காட்டிலும் 11.6% அதிகமாகும். இதன் மூலம், நாட்டின் மொத்த GDP-இல் 73% பங்களிக்கும் முக்கிய ஆறு மாநிலங்களில் ஒன்றாக பினாங்கின் நிலை உறுதிப்படுத்தப்படுகிறது.
இது மாநிலத்தின் அதிகபட்ச தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ரிம72,586 ஐ எட்டியது.
பினாங்கின் தொடர்ச்சியான வெற்றிக்கும், நிலையான சாதனைகளுக்கும் முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தலைமையிலான கொள்கை ரீதியான தலைமைத்துவம் சிறந்த பங்களிப்பை அளித்ததாக துன் ரம்லி கூறினார்.
பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையை மாநிலத்தின் எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய இலக்காக அவர் பாராட்டினார். மேலும் அதை நிறைவேற்றுவதற்கு தனது முழு ஆதரவையும் உறுதியளித்தார்.
பினாங்கு சிலிக்கான் வடிவமைப்பு @5 கிமீ+ போன்ற முன்முயற்சிகளையும், குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தவும் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கவும் நோக்கமாகக் கொண்ட பினாங்கு IC வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் பூங்கா போன்ற பல்வேறு திட்டங்களையும் அவர் வரவேற்றார்.
“பினாங்கு ஜி.பி.எஸ் இண்டஸ்ட்ரி அகாடமி மற்றும் STEM மேம்பாட்டு உருமாற்றம் போன்ற தளங்கள் மூலம் திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்கவும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. ஜூரு-சுங்கை டுவா உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை, முத்தியாரா இலகு ரயில் போக்குவரத்து (LRT), பேராக்-பினாங்கு நீர் திட்டம் மற்றும் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் (PIA) விரிவாக்கம் போன்ற பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர் ஆதரவிற்குப் பாராட்டினார்.
பினாங்கு சிலிக்கான் தீவு திட்டம் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக அவர் குறிப்பிட்டார், இதன் மூலம் ஏப்ரல்,25 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 150 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது, இது 6.5% நிறைவு விகிதத்தில் உள்ளது.
தண்ணீருக்கான தேவை அதிகரித்து வருவதால், பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) அதன் நீர் தற்செயல் திட்டம் 2030 (WCP 2030) இல் ஈடுபடுவதற்காக அறிவித்த ரிம1.185 பில்லியன் முதலீட்டை துன் ரம்லி ஒப்புக்கொண்டார். 2050 ஆண்டு வரை வடக்குப் பகுதிக்கு பயனளிக்கும் பேராக்-பினாங்கு நீர்த் திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
‘முத்தியார வீடமைப்பு’ திட்டத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டுக்குள் 220,000 வீடுகள் கட்டும் இலக்கில் 76% ஐ எட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, 2024 முழுவதும், பினாங்கு அரசாங்கம் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம் 280,000 தகுதியுள்ள நபர்களுக்கு RM50.54 மில்லியனை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இறுதியாக, மாநில ஆளுநர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியலை விட மக்களுக்கு முன்னுரிமை அளித்து பினாங்கின் நல்லிணக்கம், செழிப்பு மற்றும் தனித்துவமான பாரம்பரியத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்.