பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டம் இன்று முதல் வழங்கப்படும், வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – கடந்த வாரம் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் ரிம75 மில்லியனுக்கும் அதிகமான பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டம் இன்று முதல் அதன் இலக்கு குழுவுக்கு வழங்கப்படுகிறது என கொம்தாரில் நடைப்பெற்ற முகநூல் நேரலை செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் குறிப்பிட்டார்.

கொவிட் -19 தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் சுமையைக் குறைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியுதவி பெறுநர்களுக்களின் மின்னணு நிதி பரிமாற்றம் (EFT) மூலம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக அனுப்பப்படும் என விவரித்தார்.

பினாங்கு மாநகர் மன்றம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரு ஊராட்சி மன்ற 4,700 முன் வரிசை வீரர்கள் இன்று ரிம300-ஐ ஊக்கத்தொகையாகப் பெற்றுள்ளனர்.

இன்று, குறைந்த வருமானம் கொண்ட குழுக்களை (பி 40) உள்ளடக்கிய பொருளாதார சமத்துவ திட்டம் (ஏ.இ.எஸ்) கீழ் 551 பெறுநர்களும் தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் ரிம500-ஐ பெறுவார்கள். இதனிடையே, வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு ரிம500 மற்றும் மின்னியல் வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு (ஈ-ஹெயிலிங்) ரிம 300 பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினரும் வசதிக்குறைந்த மக்களுக்கு உதவ வகையில் ரிம30,000 அவசர உதவி நிதியும் பெற்றுள்ளனர்.

மாநில முதல்வர் கூறுகையில் மத்திய அரசு முன் வரிசை வீரர்களுக்கும், அவரவர் துறைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளதை விவரித்தார்.

மாநில சமூக நலத்துறையின் (ஜே.கே.எம்) கீழ் உள்ள பெருநர்களுக்கு, இந்த நிதியுதவி இரு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது. மாநில அரசுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இந்த மாதம் (ஏப்ரல்) தங்கள் வாடகையைச் செலுத்த வேண்டியதில்லை.

அதே சமயம், மாநில அரசுக்குச் சொந்தமான வாடகை முறையில் வீடு வாங்கும் (ஆர்.டி.ஓ) திட்டங்களில் வசிப்பவர்கள், நம்பிக்கைக் கடன் திட்டம், தொழில்முனைவோர் நிதி மற்றும் மாணவர் கடன் ஆகியவை இந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களுக்குக் கட்டணம் தள்ளி செலுத்த அனுமதிக்கப்படுகின்றன.

அதே செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பி.டி.சி) கொவிட்-19 நிதிக்கு ரிம1 மில்லியனை நன்கொடையாக அளித்துள்ளதை தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் சாவ் கொன் யாவ் அறிவித்தார்.

வருகின்ற ஜூன் மாதம் 30-ஆம் நாள் வரை வாங்கும் மற்றும் விற்பனைக்கு (jual beli) கையெழுத்திடப்பட்ட நிலம், தொழில்துறை நிலம் மற்றும் தொழில்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து தரப்பினரின் சுமையைக் குறைக்க பினாங்கு மேம்பாட்டுக் கழகம் பல முயற்சிகளை எடுத்துள்ளன.

அவை விற்பனை சலுகையை ஏற்றுக்கொள்வதற்கான சரிபார்ப்பு காலம், தொழில்துறை மற்றும் தொழில்துறை அல்லாத நிலங்களை குத்தகைக்கு விடுதல் மற்றும் கட்டிடம் போன்றவற்றின் காலம் ஜூன் 30 வரை நீடித்தல்,

-பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திற்கு சொந்தமான புக்கிட் தெங்கா கடைகள் (24 யூனிட்கள்) மற்றும் கொம்தாரில் இருக்கும் கடைகள் அல்லது கியோஸ், பத்து கவான் விளையாட்டு அரங்கம், புக்கிட் பெண்டேரா மற்றும் லோரோங் குலிட் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் ஆகிய பி.டி.சி திட்டங்களை வாடகைக்கு எடுக்கும் வணிகர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு ஒரு மாத வாடகைக்கு விலக்கு அளிக்கப்படும்.

-உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எஸ்.எம்.இ) , தி ஒன் பாயான் பாரு, பர்மா சாலை பர்மா வணிக வளாகங்கள் மற்றும் கெடா சாலை வளாகம் ஆகியவற்றில் உள்ள வர்த்தக பிரிவுகளுக்கு ஏப்ரல் மாத வாடகை ஆறு மாதங்களுக்கு திட்டமிடப்பட்டு அட்டவணை முறையில் 2020க்குள் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

-செசில் சாலை மற்றும் பெங்காலான் வெல்ட் மற்றும் தாமான் கிரெசென்ஷியா , பத்து கவான் ஆகியவற்றிற்கு குடியிருப்பு வாடகை கட்டணங்களுக்கு (ஏப்ரல் மற்றும் மே)இரண்டு மாத விலக்கு.

-பாலேக் புலாவ் இளைஞர் நலச் சங்கத்திற்கு (உணவு டிரக்) ஏப்ரல் 2020 க்கு ஒரு மாத நில வாடகை விலக்கு.

இதனிடையே, பி.டி.சி பினாங்கு வணிக இலாபமற்ற கடனுதவித் திட்ட விண்ணப்பத்திற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.