பினாங்கு மாநிலத்தில் கட்டுமான கழிவு தனிமைப்படுத்தும் தளங்களுக்கான வழிகாட்டுதல்கள் அறிமுகம்

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு2030 இலக்கை நோக்கி,  கட்டுமான கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்வதற்காக தனிமைப்படுத்துவதற்கான  வழிகாட்டுதல்களை உருவாக்குவதன் மூலம் பிற மாநிலங்களின் ஊராட்சி மன்ற (பி.பி.தி) ஒப்பிடும்போது பினாங்கு மாநிலம் முன்னிலை வகிக்கிறது.

வீட்டுவசதி, உள்ளூராட்சி மற்றும் மாநகர் & கிராமப்புற திட்டமிடலுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, இவ்வழிகாட்டுதல்கள் உருவாக்குவதன் மூலம் ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள் இத்திட்டம் குறித்து தங்கள் ஆலோசனைகளை
(ஆர்.எஃப்.பி)இரு ஊராட்சி கழகங்களிடம் முன்மொழிய அழைக்கப்படுவதாக கூறினார்.

“தற்போது, ​​60 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்பாங் ஜாஜர் தளத்தை செபராங் பிறை பகுதிக்கான கட்டுமானக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

“பழைய தொழில்நுட்பத்தை கொண்டு கட்டுமான  கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு அதிக நிலம் தேவைப்படும். இருப்பினும், தற்போதைய அதிநவீன  தொழில்நுட்பத்தை கொண்டு 60 ஏக்கர் நிலப்பரப்பில் அதிகமான கட்டுமான கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியும்.

” தனியார் துறை ஆர்.எஃப்.பி-களை சமர்ப்பிக்க ஏப்ரல் மாதத்தில் விளம்பரம் செய்யப்பட்டது.  புதிய குத்தகைதாரர்களை 2022-ஆம் ஆண்டில் நியமிக்க இரு உள்ளூராட்சி கழகங்களும் இலக்கு கொண்டுள்ளது,” என்று  டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் இக்ஸொரா தங்கும்விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் சமூகநல ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ; பினாங்கு மாநகர் கழக தலைவர் மேயர் டத்தோ இயூ துங் சியாங்; செபராங் பிறை மாநகர் கழக தலைவர் மேயர் டத்தோ ரோசாலி மாமுட் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தீவுப் பகுதியில், 2020 ஆம் ஆண்டிற்கான தினமும் சேகரிக்கப்படும் அனைத்து வகையான கழிவுகள் சுமார் 970 டன் என பதிவாகியுள்ளது, இதில் ஒரு நாளைக்கு 235 டன் கட்டுமான கழிவுகள் அடங்கும் என்றார்.

அதேவேளையில் செபராங் பிறை பகுதியில், 2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்ட அனைத்து வகையான கழிவுகள் சுமார் 1,515 டன்களாக பதிவாகியுள்ளது என்றும், ஒரு நாளைக்கு 164 டன் கட்டுமான கழிவுகள் அகற்றப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

“தீவில் உள்ள அனைத்து வகையான கழிவுகளின் மொத்த சேகரிப்பு செபராங் பிறையுடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தாலும், கட்டுமான  கழிவுகளின் எண்ணிக்கை  கூடுதலாக உள்ளன.

“தீவின் கட்டுமான திட்டங்கள் அதிகமாக இருப்பதால் கழிவுகளின் அளவும் அதிகமாக இருக்கலாம்,” என்றார்.

செபராங் பிறையில் 2020-ஆம் ஆண்டிற்கான 55.91 விழுக்காடு மறுசுழற்சி விகிதத்தைப் பதிவு செய்ததற்காக ஜெக்டிப் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இது நாட்டின் மிக உயர்ந்த சாதனையாகும்.

இது தவிர, கடந்த ஆண்டு தீவில் மறுசுழற்சி விகிதம் 31.6 விழுக்காடாக பதிவாகியுள்ளது என்றும் அவர் விளக்கினார்.