பினாங்கு மாநிலத்தில் 70% பெரியோர்களுக்கு முதல் மருந்தளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது

Admin

பத்து காவான் – “தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (PICK) கீழ் பினாங்கு மாநிலத்தில் பெரியவர்களுக்கான முதல் மருந்தளவு தடுப்பூசி 70 விழுக்காடு செலுத்தப்பட்டுள்ளது.

“எஞ்சிய 30 விழுக்காட்டினர் வருகின்ற செப்டம்பர் மாத தொடக்கத்தில் முதல் மருந்தளவு முழுமையாக பெறுவர் என்று எதிர்ப்பார்ப்பதாக,” பத்து காவான் பி.எஸ்.சி-19 திட்ட செயல்முறையை காண வருகையளித்த போது மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு கூறினார்.

இரண்டாவது மருந்தளவு தடுப்பூசி செலுத்துதல் இதுவரை 36 விழுக்காடு எட்டியுள்ளதாகவும், அடுத்த வாரம் 40 விழுக்காட்டை எட்டும் என்று, நம்பிக்கை தெரிவித்தார்.

பத்து காவான் பி.எஸ்.சி-19 திட்டம் ‘drive through’ வாயிலாக நடத்தப்படுகிறது. இதுவரை, 1919 பேர்கள் கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ; பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு; புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் அய்க்; சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான டத்தோ டாக்டர் அமர் பிரத்திபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“ஆகஸ்ட் 12 முதல் ஏற்பட்ட ‘ஃபைசர்-பயோஎன்டெக்’ (பைசர்)
Pfizer-BioNTech (Pfizer) தடுப்பூசி விநியோக பற்றாக்குறையால் மாநிலத்தில் நான்கு தடுப்பூசி மையங்கள் (பி.பி.வி) ஒரு நாளைக்கு (ஆகஸ்ட் 15, 2021) மூடப்படப்படும்.

“எனவே, இரண்டாவது மருந்தளவு தடுப்பூசி பெறுநர்களுக்கு சிறிது கால தாமதம் ஏற்படும். மேலும், சம்பந்தப்பட்ட பொது மக்கள் MySejahtera மூலம் புதிய தேதிகளை எப்போதும் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

தென்மேற்கு மாவட்டம், பாலிக் புலாவ் விளையாட்டு வளாகம்; தென்மேற்கு மாவட்டம், பாயான் பாரு மக்கள் மண்டபம்; வட கிழக்கு மாவட்டம், தாபா பெஸ்தா மற்றும் வட செபராங் பிறை, மில்லினியம் அரங்கம் ஆகிய நான்கு பி.பி.வி மையங்கள் மூடப்படும் என பினாங்கு சுகாதார துறை அறிவித்ததாக முதல்வர் கூறினார்.

“இந்த அனைத்தும் பி.பி.வி மையங்களும் ஆகஸ்ட்,16 முதல் மீண்டும் செயல்படும்.

“எனவே, ஆகஸ்ட் 15 முதல் 19 வரை ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவு செலுத்த திட்டமிட்ட பெறுநர்கள் வருகின்ற ஆகஸ்ட், 22 முதல் 26 வரை பெறுவர்,” என்று நேற்று சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாநில அரசு, அரசியல் பிரச்சினைகள் ஏற்படும் சூழலிலும் PICK திட்டம் சீராக இயங்குவதை உறுதி செய்யும். ஏனெனில், மாநிலத்தில் உள்ள பொது மக்களின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாநில அரசு 38 இடங்களில் நடத்தப்பட்ட பி.எஸ்.சி-19 திட்டத்தில் 32,146 பேர்கள் கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதில் RTK-antigen ரக சோதனையில் 1850 (5.85%) பேர்களுக்கு தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட தரப்பினர் மீண்டும் PCR (பி.சி.ஆர்) பரிசோதனை மேற்கொண்டதில் 935 பேர்களுக்கு மட்டுமே தொற்று கண்டறிப்பட்டன, என ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் சமூகத்தில் பரவுவதைத் தடுக்க பி.எஸ்.சி-19 திட்டம் அவசியம், என வலியுறுத்தினார்.

மேலும், பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் பினாங்கு செபராங் பிறை மாநகர் கழகம்(எம்.பி.எஸ்.பி) முன் வரிசை பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும், என்றார்.