ஜார்ஜ்டவுன் – பினாங்கு மாநில அரசுத் துறையில் 16 ஆண்டுகளாக முக்கிய பொறுப்பேற்று பணியாற்றிய ஜோனாத்தன் பிரேண்டி பி. பாகாங் அவர்களின் பணி மாற்றம் தொடர்பாக, மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அவர்கள் மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துகளும் தெரிவித்தார்.
ஜோனாத்தன், அடுத்ததாக லாபுவான் கூட்டரசுப் பிரதேச மாநில சுகாதாரத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்ற உள்ளார்.
முன்னதாக, பினாங்கு மாநிலத்தில் மாநில மாவட்ட அலுவலகம்; மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு, இறுதியில் மலேசிய அமைப்பு பதிவுத் துறையின் இயக்குநராகப் பணியாற்றினார்.
பினாங்கில் பல்வேறு திட்டங்கள், மேம்பாட்டு நடவடிக்கைகள், மற்றும் சமூக நலத்திட்டங்களின் முன்னணியில் இருந்த அவரது பணி, அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் உயர்ந்த பாராட்டைப் பெற்றது.
“அரசுத் துறை ஊழியர்கள் பணி மாற்றங்களுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, புதிய சூழல்களில் தங்களைச் சிறப்பாக நிலைநிறுத்த வேண்டும். ஜோனாத்தன் பினாங்கின் வளர்ச்சிக்காக தனது அனுபவத்தையும் திறமையையும் முழுமையாக அர்ப்பணித்தார். அவருடைய சேவையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம்.”
மேலும், முதலமைச்சர் ஜோனாத்தனின் எதிர்கால பணிக்காக தனது நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
“பினாங்கு எனக்கு இரண்டாவது வீடாகவே இருந்து வந்தது. இங்கு கடந்த 16 ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை,” என ஜோனாத்தன் கூறினார்.