பினாங்கு மாநில அரசு உயர்க்கல்வி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது.

ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட இந்திய மாணவி

பினாங்கு மாநில அரசு இனம், மதம் மற்றும் அரசியல் பின்னணி பார்க்காமல் பினாங்குவாழ் மாணவர்களுக்குத் தொடர்ந்து 10-வது முறையாக உயர்க்கல்வி ஊக்கத்தொகை வழங்கியது. மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உயர்க்கல்வி நிலையங்களில் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்த மாணவர்களுக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு எதிர்கால பினாங்கு மாநில முன்னேற்றத்திற்கு இவர்களே ஊன்றுகோளாகத் திகழ்வர் என்றார்.
பினாங்கு மாநில அரசு கடந்த 2008 முதல் 2015 ஆண்டு வரை கூடுதல் வருமானமாக ரிம574 லட்சம் பெற்றுள்ளதால் தொடர்ந்து உயர்க்கல்வி மையங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற பினாங்கு வாழ் மாணவர்களுக்கு ரிம1,000 ஊக்கத்தொகையாக வழங்கியது. மாநில அரசு கடந்த 5 ஆண்டுகளிலே(2008-2015) ரிம373 லட்சம் கூடுதல் வருமானம் கிடைக்கப்பெற்ற வேளையில் கடந்த 50 ஆண்டுகளில் (1957-2007) தேசிய முன்னணி ஆட்சியில் ரிம373 லட்சம் மட்டுமே பெறப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர். இலஞ்ச ஊழல் அற்ற தூய்மையான அரசு நிர்வாகமே, தொடர்ந்து பினாங்கு மக்களுக்குத் தங்கத் திட்டம் மட்டுமின்றி ஊக்கத்தொகை வழங்குவதற்கு அடிப்படையாக விளங்குகிறது.
10-வது ஆண்டாக வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை மலேசியாவில் அமைந்துள்ள அனைத்து அரசு உயர்க்கல்வி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் உயர்க்கல்வி மையங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றார் மாநில முதல்வர்.

இந்த ஆண்டு பினாங்கு மாநில 2 மாவட்டங்களைச் சேர்ந்த 888 மாணவர்களுக்கு உயர்க்கல்வி நுழைவுக்கட்டணம் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டன. மாநில அரசு மொத்தமாக ரிம1,052,000.00 மானியத்தை மாநில அரசு 2016/2017 தவணைக்கான உயர்க்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளது பாராட்டக்குறியதாகும். அதிகரித்து வரும் வாழ்க்கை சுமையினால் அவுதியூறும் பெற்றோர்களின் பணச்சுமையை குறைக்கும் நோக்கத்தில் மாநில அரசு இம்மானியத்தை வழங்குவது சாலச்சிறந்தது.