மாநில வீடமைப்புத் திட்ட பிரச்சனைக்கு பரிந்துரை சமர்பிக்கப்படும் – ஜெக்டிப்

திரு ஜெக்டிப் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனுவார் வாகியோவுக்கு ரிம1,000 வழங்கினார்.

பினாங்கு மாநிலத்தில் ஏற்படும் வீடமைப்புப் பிரச்சனைக்கு உடனடி தீர்வுக் காண மாநில அரசுவும் மாநில எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஹஜா ஜாஹாரா இணைந்து கூட்டரசு அரசுவிடம் பரிந்துரை சமர்ப்பிக்கவிருப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.
தற்போது மாநில வீடமைப்புத் திட்டத்தில் இரு பிரச்சனைகளை களைய வேண்டும். முதலாவது பினாங்கில் குறைந்த மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள் வாங்கும் நபர்களின் அதிகமான வங்கி கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் கூட்டரசு அரசாங்கமும் மலேசிய தேசிய வங்கியும் இணைந்து இப்பிரச்சனைக்குத் தீர்வுக் காண வேண்டும். இரண்டாவது, மலிவு விலை வீட்டு உரிமையாளர்கள் தங்களின் வீடுகளை பிறர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடுவதைக் குறித்து எழும் பிரச்சனைக்கும் தீர்வுக் காண வேண்டும்.
இந்தப் பரிந்துரைக்கு 13-வது முறையாக நடைபெற்ற நான்காம் தவணைக்கான இரண்டாவது சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஹஜா ஜாஹாரா வீடமைப்புத் திட்ட பரிந்துரைக்கு ஒப்புதல் கூறியுள்ளார்.
“இந்த வீடமைப்புப் பிரச்சனைக் குறித்து எதிர்க்கட்சித் தலைவரிடம் முன்னதாகவே ஒப்புதல் வாங்கியதாகவும் அடுத்த ஆட்சிக்குழு சந்திப்புக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இப்பரிந்துரை முன்வைக்கப்படும். ஆட்சிக்குழு சந்திப்புக் கூட்டத்தில் அனுமதி கிடைக்கப்பெற்றால் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையொப்பம் பெறப்பட்டு கூட்டரசு அரசாங்கத்திடம் பரிந்துரை சமர்பிக்கப்படும்” என கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக்குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ கூறினார்.
மலிவு விலை வீடு வாங்குநர்கள் விண்ணப்பிக்கும் வங்கி கடனுதவி விண்ணப்பங்களில் 70% நிராகரிக்க்கப்படுகிறது. இதனால் மாநில அரசு முதல்வரின் மூலம் குரல் எழுப்பப்பட்டு கூட்டரசு அரசாங்கம் அதிகமான வங்கி கடனுதவி நிராகரிப்புக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதோடு பினாங்கில் முதல் வீடு வாங்கும் பொது மக்களின் கனவை நினைவாக்க வேண்டும் .
தற்போதைய வீடமைப்பு அபிவிருத்தி கட்டுப்பாடு மற்றும் உரிமம் சட்டத்தின் கீழ் மலிவு விலை வாங்குநர் மற்றவர்களுக்கு வாடகைவிட முடியாது என குறிப்பிடப்படவில்லை. அதனால் அதிகமான மலிவு விலை வீடுகள் வாடகைக்கு விடப்படுவதோடு குறிப்பாக வெளிநாட்டவருக்கு வாடகைக்கு விடுவதால் அதிகமான சமூக பிரச்சனைகள் எழுகிறது.
“எனவே கூட்டரசு அரசாங்கம் மலிவு விலை வாங்குநர்கள் தங்களின் வீடுகளை வாடகைக்கு விட முடியாது என வீடமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்தல் அல்லது அட்டவணையில் தெளிவாக குறிப்பிட வேண்டும்” என தாமான் ஃப்ரீ ஸ்கூல் அருகில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியை வழங்கியப் பின் இதனை நிருபர்களிடம் தெரிவித்தார்.
டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான திரு ஜெக்டிப் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனுவார் வாகியோவுக்கு ரிம1,000 மற்றும் தாமான் ஃப்ரீ ஸ்கூல் சேர்ந்த ஐந்து கடை உரிமையாளர்களுக்கு ஒருவருக்கும் தலா ரிம500 வழங்கினார்.