ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம், 2018 முதல் 2025 ஆண்டு வரை பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரிம1 பில்லியனுக்கும் அதிகமாக நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த நிதி, i-Sejahtera திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், இந்த நிதி உதவிகள், சமூக நலன் திட்டங்களை முன்னிறுத்தும் மாநில அரசின் உறுதிபாட்டினைப் பிரதிபலிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
“இந்த சமூக நல திட்டங்களில் i-Sejahtera திட்டம் செயல்படுத்த கூடுதலான நிதி ஒதுக்கீடு வழங்கப்படுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் (OKU), ‘தங்க குழந்தை’, ‘குடும்ப மாது’, ஈமச்சடங்கு நிதியுதவி ஆகிய பிரிவுகளின் கீழ்
சுமார் ரிம370.45 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், இரண்டாவது நிலையில் பினாங்கு கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு பொது மக்களுக்கு வழங்கிய நிதியுதவி திட்டம் இடம்பெறுகிறது. இத்திட்டத்திற்கு மொத்தம் ரிம174.52 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தக் காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து தொடர்பான ஊக்கத்தொகைகள் மற்றும் உதவித்தொகைகளும் இடம்பெறுகின்றன. அவற்றில் வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி பேருந்து நடத்துநர்களுக்கான ஊக்கத்தொகை(ரிம11.06 மில்லியன்), BEST பாயான் லெப்பாஸ் இலவச தொழில்துறை மண்டலம் (ரிம4.35 மில்லியன்), BEST
கொம்தார் (ரிம5.91 மில்லியன்), முத்தியாரா பாஸ் (ரிம21.5 மில்லியன்), CAT இலவச பேருந்து (ரிம49.16 மில்லியன்) மற்றும் ரிம1.03 மில்லியன் பயணப் படகு நுழைவுக் கட்டணங்களுக்கான உதவித் தொகைகள் ஆகியவை அடங்கும்.
மேலும், தேசிய வகை சீனப் பள்ளிகள் (SJKC), தேசிய வகை இடைநிலைப் பள்ளிகள் (SMJK), தனியார் சீன இடைநிலைப் பள்ளிகள் மற்றும் மிஷனரி பள்ளிகளுக்கு மாநில அரசு மொத்தம் ரிம69.09 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை வழங்கியது,” என்று அவர் 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதல் கூட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் தொகுப்புரை அமர்வில் கூறினார்.
நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், பினாங்கு 80% அதிகபட்ச பராமரிப்பு நிதி (TPM80PP) மொத்தம் ரிம68.95 மில்லியன், புறநகர் மேம்பாட்டுத் திட்டங்கள் (1,569 திட்டங்கள் -ரிம50.98 மில்லியன்) மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (NGOக்கள்) மற்றும் பிற சங்கங்களுக்கான பங்களிப்புகள் மொத்தம் ரிம47.05 மில்லியன் ஆகியவை பிற செலவினங்களில் அடங்கும், என்றார்.
“மாநில அரசின் கீழ் சமத்துவ பொருளாதார நிதியுதவி (AES) ரிம27.78 மில்லியன் செலவு, முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான (RIBI) மொத்தம் ரிம26.25 மில்லியன் ஒதுக்கீடு, பினாங்கு மாநில மாணவர் கடனுதவி திட்டம் (ரிம24.06 மில்லியன்) அத்துடன் மத ஆசிரியர்களுக்கான ஒதுக்கீடுகள், KAFA ஆசிரியர் ஊக்கத்தொகை மற்றும் சிறிய பள்ளி பராமரிப்பு (ரிம19.54 மில்லியன்) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
“இந்த செலவில் பினாங்கு மாநில சிறிய உதவித்தொகை (ரிம18.63 மில்லியன்), உயர்கல்வி மாணவர்களுக்கான பதிவு செய்வதற்கான நிதியுதவி (iBITA -ரிம17.76 மில்லியன்), மீனவர்களுக்கான உதவி (ரிம7.24 மில்லியன்), சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கான ஊக்கத்தொகை (ரிம1.31 மில்லியன்) மற்றும் ரிக்ஷா ஓட்டுநர்களுக்கான நிதியுதவி (ரிம1.20 மில்லியன்) ஆகியவை அடங்கும்,” என்று அவர் விளக்கமளித்தார்.