பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

பிறை தொகுதியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி சிறுவர்களுக்குப் பரிசு வழங்கினார்.

பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பு 8-வது முறையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநில அளவிலான கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் கடந்த டிசம்பர் 18-இல் பினாங்கு ஃபோட் கொன்வாலிஸ் வளாகத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநில அரசும் மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து 8-வது முறையாக நடைபெறும் இந்த மாநில அளவிலான கிறிஸ்துமஸ் விருந்துபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்குப்பெற்றனர். இந்தக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சிறப்பு வருகையளித்தார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் நாட்டில் வளத்தையும் அமைதியும் நிலைநாட்ட அனைவரும் ஒன்றாக பாடுப்படுவோம் என சூளுரைத்தார். இவ்வாண்டுக்கான கருப்பொருள் “அனைவரிடமும் சமாதானம் & ஒற்றுமையாக இருத்தல்” என்பதாகும். இதனிடையே, இம்முறை பினாங்கில் அனைத்து தேவாலயங்களும் இணைந்து ஆறு கருணை இல்லங்களுக்கு உதவி நல்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பின் தலைவர் திரு சாம் சுரேந்திரன் கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பிற்கு வருகை அளித்த அனைவரையும் வருக வருக என வரவேற்றதுடன் இவ்விழா நடைபெறுவதற்கு உறுதுணையாகத் திகழ்ந்த மாநில நம்பிக்கை கூட்டணி அரசிற்கும் மனமார்ந்த நன்றி மாலை சூட்டினார்.

மாநில அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள்

பினாங்கு மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி அரசு ஆங்காங்கே கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பை நடத்துகிறது. பிறைத் தொகுதியின் சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழகமும் பிறை சட்டமன்றமும் இணைந்து கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் சிறப்புரையாற்றிய இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அனைத்து இன மக்களும் ஒன்றுமையாக இருந்து இப்பண்டிகையை மேலும் மெருகூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்தினத்தன்று கலைநிகழ்ச்சியும் நம் நாட்டின் திறன்மிக்க கலைஞர்களின் படைப்புகளும் நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தன. அங்கு பொதுமக்கள் புற்றீசல் போல திரண்டனர். சுமார் 1,500 பேருக்கு உணவு பண்டங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே, 150 சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான பண்டிகை பரிசு பிறை சட்டமன்ற உறுப்பினர் ப.இராமசாமி தமது பொற்கரத்தால் வழங்கினார்.