பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் நில மேம்பாடு சுயமாக மேம்படுத்தப்படும் – முதலமைச்சர்

Admin

ஜார்ச்டவுன் – கடந்த 50 ஆண்டுகளில், பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) ஒன்பது தொழிற்பேட்டைகளை வெற்றிகரமாக உருவாக்கி, மாநிலத்தின் பொருளாதார சுற்றுச்சூழல் அமைப்பு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் துணைபுரிந்துள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், தனியார் துறையை ஈடுபடுத்தாமல் முக்கியப் பகுதிகளுக்கு புதிய தொழில்துறை பகுதிகளை அரசு நிறுவனமான PDC உருவாக்கும் என்று கூறினார்.

“குறைந்த மூலோபய மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகள் மட்டுமின்றி கூடுதல் நிதிச் செலவுகளை உள்ளடக்கிய திட்டங்களை மட்டுமே
PDC தனியார் துறையுடன் இணைந்து உருவாக்க இணக்கம் கொள்கிறது,” என நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கூறினார்.

இதனிடையே, பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான கொன் இயோவ், கடந்த வாரம் நடந்த சட்டமன்ற அமர்வின் தொகுப்புரையின் போது, ​​PDC மற்றும் Umech Land இடையிலான பத்து காவான் தொழிற்பேட்டை 2 (BKIP2) திட்டத்தின் 559 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய தொழில்துறை பகுதியை மேம்படுத்தும் ஒத்துழைப்புத் திட்டம் தொடர்பான விஷயங்களை ஏற்கனவே விளக்கியதாகக் கூறினார்.

தொழில்துறை பகுதிகளை மேம்படுத்துவதற்கும் முதலீட்டை ஈர்ப்பதற்கும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திற்குச் சொந்தமான நிலத்தின் பட்டியல் குறித்து வாய்மொழி கேள்வி பதில் அமர்வில் ஆயிர் பூத்தே சட்டமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கூடுதல் கேள்விக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, குவான் எங் தொழில்துறை நிலத்தை தனியாகவோ அல்லது கூட்டு முயற்சியாகவோ தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் PDC தொடர்ந்து அதன் முக்கிய பங்கை வகிக்குமா என கேள்வி எழுப்பினார்.