ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மொத்தமாக ரிம1.088 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இது ரிம19.92 மில்லியன் பற்றாக்குறையுடன், மாநில வரலாற்றில் குறைந்த அளவிலான பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது.
இந்த வரவு செலவு திட்டத்தில், மாநிலத்தின் நிதி மேலாண்மை விவேகமானதாகவும், நிலையானதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும், பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வை மற்றும் மலேசிய மடானி குறிக்கோளுக்கு இணங்க மக்களுக்கு நன்மைகள் செய்வதை உறுதிசெய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
இந்த ரிம1.088 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில், ரிம1.051 பில்லியன் விநியோகச் செலவினத்திற்கும் ரிம37.07 மில்லியன் கட்டாயச் செலவினத்திற்கும் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“கூடுதலாக, ரிம318.62 மில்லியன் மொத்த மேம்பாட்டுத் திட்டங்களை ஈடுகட்ட ரிம265 மில்லியன் மாநில மேம்பாட்டு நிதி வாரியத்திற்கு (KWPN) அனுப்பப்படுகிறது.
“ரிம1.088 பில்லியன் செலவின மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது ரிம1.068 பில்லியன் மாநில வருவாய் மதிப்பீட்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், 2026 வரவு செலவில் மாநில வரலாற்றில் மிகக் குறைந்த பற்றாக்குறை மதிப்பீட்டைப் பதிவு செய்கிறது. இது 2025 இல் திட்டமிடப்பட்ட பற்றாக்குறையுடன் (ரிம33.63 மில்லியன்) ஒப்பிடும்போது ரிம19.92 மில்லியன் ஆகும்,” என்று அவர் கூறினார்.
2025 நவம்பர்,14 அன்று பினாங்கு மாநில சட்டமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கான மசோதா 2026-ஐ தாக்கல் செய்யும் போது அவர் இவ்வாறு கூறினார்.
நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினரான கொன் இயோவ், மேலாண்மைச் செலவில் ரிம226.73 மில்லியன் அல்லது 20.84 சதவீதம் ஊதியங்கள்; சேவைகள் மற்றும் பொருட்கள் (ரிம200.51 மில்லியன், 18.43 சதவீதம்); சொத்துக்கள் (ரிம3.59 மில்லியன், 0.33 சதவீதம்); மானியங்கள் மற்றும் நிலையான கட்டண வரிகள் (ரிம645.73 மில்லியன், 59.35 சதவீதம்) மற்றும் பிற செலவுகள் (ரிம11.38 மில்லியன், 1.05 சதவீதம்) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்று விளக்கமளித்தார்.
“2026 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட இயக்கச் செலவுகள் 2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ரிம147.72 மில்லியன் அல்லது 15.71 சதவீதம் அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ரிம19.9 மில்லியன் அல்லது 9.25 சதவிகிதம் ஊதிய உயர்வு, பொது சேவை ஊதிய முறையின் (SSPA) இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதன் காரணமாகவும், மூன்று முதல் ஏழு சதவிகிதம் வரை சம்பள உயர்வு மற்றும் குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500 இலிருந்து ரிம1,700 ஆக அதிகரித்ததன் காரணமாகவும்
உயர்வுக் கண்டது, என்று அவர் மேலும் கூறினார்.
இன்று, மதிப்பிடப்பட்ட மேம்பாட்டு செலவினங்களைப் பொறுத்தவரை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் உட்பட மொத்தம் 122 திட்டங்கள் தொடரப்படும் என்று கொன் இயோவ் நம்பிக்கை தெரிவித்தார்.
“இதில் முத்தியாரா இலகு இரயில் சேவை (LRT) திட்டம், கெர்னி பே கட்டம் 2 திட்டம், சிலிக்கான் தீவின் மேம்பாடு மற்றும் பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டத்தின் (PTMP) கீழ் இணைப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
“2026 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட பிற மேம்பாட்டுத் திட்டங்களில் பினாங்கு அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தின் மேம்பாட்டுத் திட்டம், புக்கிட் பெண்டேராவின் மேம்பாட்டுத் திட்டம், மாநில விளையாட்டு மன்றத்தின் விடுதி கட்டிடத்தின் கட்டுமானத் திட்டம் மற்றும் வடகிழக்கு ஷரியா துணை நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத்தின் கட்டுமானம் ஆகியவை உள்ளடங்கும்.”
“கூடுதலாக, பத்து மாவுங் மண்டபம் அமைத்தல், கம்போங் பாரு, அல்மா மண்டபம் மற்றும் தாமான் செனாங்கின் மண்டபம் போன்ற சமூக மண்டப கட்டுமானத் திட்டங்களும் தொடர் திட்டங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினருமான சாவ், 13வது மலேசியா திட்டத்தின் (13MP) கீழ் மொத்தம் ரிம283 மில்லியன் ஒதுக்கீட்டில் 10 பெருந்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததற்காக மத்திய அரசுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்தத் தொகையில், ரிம54.5 மில்லியன், ‘பான் தீவு இணைப்பு’ (PIL) ஆய்வு, பாயான் லெப்பாஸிலிருந்து தெலுக் கும்பார் வரையிலான சாலை மேம்படுத்தல் திட்டத்தின் ஆரம்பப் பணிகள், குபாங் செமாங், புதிய சுகாதார கிளினிக் கட்டுமானம் மற்றும் கெபாலா பத்தாஸ் மருத்துவமனையில் பல்நோக்கு கட்டிடம் கட்டுதல் போன்ற மூலோபாய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக என்று அவர் விளக்கமளித்தார்.
அதைத் தவிர, பெர்தாம் விளையாட்டு மையத்தை மேம்படுத்துதல், ஜூரு தேசியப் பள்ளியின் கட்டுமானம், ஜாலான் மவுண்ட் எர்ஸ்கிரினை ஜாலான் பர்மாவுடன் இணைக்கும் சுரங்கப்பாதையின் ஆரம்பப் பணிகள், துனா துறைமுகத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் மீனவர் சந்தையை வலுப்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும்.
“இந்த ஒப்புதலும் உறுதிப்பாடும், சமூக மலேசியாவின் கட்டமைப்பின் கீழ் தேசிய வளர்ச்சி இலக்குக்கு ஏற்ப பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சி தொடர்வதை உறுதி செய்வதில் மத்திய அரசின் அக்கறையையும் வலுவான ஆதரவையும் தெளிவாக பிரதிபலிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.