ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ரிம1.069 பில்லியன் வருவாய் மதிப்பீட்டுடனும், வெறும் ரிம5.62 மில்லியன் பற்றாக்குறையுடனும் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், மாநில வரவு செலவுத் திட்ட வரலாற்றிலேயே மிகக் குறைந்த பற்றாக்குறை கணிக்கப்பட்டுள்ளது.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், 2026ஆம் ஆண்டில் ரிம1.068 பில்லியனாக இருந்த வருவாய் மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், 2027ஆம் ஆண்டுக்கான வருவாய் ரிம0.8 மில்லியன் அல்லது 0.07 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது மாநிலத்தின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கும், சிக்கனமான நிதி நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கும் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
2027ஆம் ஆண்டுக்கான மாநில வருவாய் ரிம1.069 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மொத்தச் செலவினம் ரிம1.074 பில்லியனாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026ஆம் ஆண்டில் பதிவான ரிம19.92 மில்லியன் பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில், அடுத்த ஆண்டுக்கான பற்றாக்குறை கணிசமாகக் குறைந்துள்ளது.
பினாங்கு மாநிலத்தின் 15ஆவது சட்டமன்றத்தின் நான்காவது தவணைக்கான இரண்டாவது கூட்டத்தொடரில், 2027ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநிலத்தின் மொத்த வருவாய் மதிப்பீட்டில், ரிம224.94 மில்லியன் வரி வருவாயாகவும், ரிம566.11 மில்லியன் வரி இல்லாத வருவாயாகவும், ரிம277.79 மில்லியன் வருவாய் இல்லாத வரவுகளாகவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வரி இல்லாத வருவாய் மாநிலத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாகத் தொடர்ந்து விளங்குகிறது. இதில் நிலப் பிரீமியம் மற்றும் சிறப்புக் கட்டணங்கள் வாயிலாகக் கிடைக்கும் வருவாய், முதலீடுகள் மீதான வட்டி வருமானம் ஆகியவை முக்கியப் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய வருவாய் வசூல் நிலவரம் குறித்துப் பேசிய அவர், 2026, ஜனவரி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை மாநில அரசு ரிம847.53 மில்லியன் வருவாயை வசூலித்துள்ளதாகக் கூறினார். இது வருடாந்திர வருவாய் இலக்கில் 79.35 விழுக்காடாகும்.
“2026ஆம் ஆண்டுக்கான ரிம1.068 பில்லியன் வருவாய் இலக்கை எட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசு தொடர்ந்து வருவாய் வசூல் நிலவரத்தைக் கண்காணிப்பதுடன், சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து வசூல் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தும்,” என்றார்.
இதற்கிடையில், நிதி, பொருளாதார மேம்பாடு, நிலம் மற்றும் தொடர்புத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், 2027ஆம் ஆண்டுக்கான ரிம1.042 பில்லியன் வழங்கல் செலவினத்திற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெறும் வகையில் வழங்கல் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ஒருங்கிணைந்த நிதியத்தின் கீழ் சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய கட்டாயச் செலவினங்களுக்காக ரிம31.92 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டுக்கான மாநிலத்தின் மொத்தச் செலவினம் ரிம1.074 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகச் செலவினங்களைப் பொறுத்தவரை, பணியாளர் ஊதியத்திற்கு ரிம231.80 மில்லியன், சேவைகள் மற்றும் பொருட்களுக்கு ரிம219 மில்லியன், சொத்துகளுக்கு ரிம4.32 மில்லியன், மானியங்கள் மற்றும் நிலையான கட்டணங்களுக்கு ரிம607.96 மில்லியன், இதர செலவினங்களுக்கு ரிம11.38 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான நிர்வாகச் செலவின மதிப்பீடு, நடப்பு ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரிம13.49 மில்லியன் அல்லது 1.24 விழுக்காடு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, மானியங்கள் மற்றும் நிலையான கட்டணங்கள், இதர செலவினங்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசு ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு காரணமாக, பணியாளர் ஊதியத்திற்கான ஒதுக்கீடு ரிம5.07 மில்லியன் அல்லது 2.24 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதேபோன்று, சேவைகள் மற்றும் பொருட்களுக்கான ஒதுக்கீடும் ரிம17.47 மில்லியன் அல்லது 8.67 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக, 2027 ஜூன் மாதம் முதல் குறைந்தபட்ச ஊதியம் ரிம1,700இலிருந்து ரிம2,000ஆக உயர்த்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், துப்புரவு, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒப்பந்தச் சேவைகளுக்கான மாநில அரசின் செலவினங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாநில அளவிலான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான செலவுகள் அதிகரிப்பதும், எரிபொருள் விலை உயர்வும் இச்செலவின அதிகரிப்புக்குப் பங்களித்துள்ளன.
சொத்துகளுக்கான செலவின ஒதுக்கீடு ரிம630,000 அல்லது 17.12 விழுக்காடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, வாகனங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துகளை வாங்குவதற்கும், பழைய சொத்துகளை மாற்றுவதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மானியங்கள் மற்றும் நிலையான கட்டணங்களுக்கான ஒதுக்கீடு ரிம36.63 மில்லியன் அல்லது 5.68 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதில், மாநில மேம்பாட்டு நிதியத்திற்கான (KWPN) பங்களிப்பு 2026ஆம் ஆண்டில் ரிம265 மில்லியனாக இருந்த நிலையில், 2027ஆம் ஆண்டில் ரிம240 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளது முக்கியக் காரணமாகும்.
அத்துடன், அரசு தொடர்புடைய நிறுவனங்கள் (GLC), மாநில சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் மாநில முகவர் அமைப்புகளுக்கான நிர்வாக மானியங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களும், அடுத்த ஆண்டுக்கான மாநில ஆட்சிக்குழுவின் (MMK) ஒதுக்கீட்டுத் தேவைகளும் இந்தக் குறைப்பில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே, மேம்பாட்டுச் செலவினங்களுக்காக 2027ஆம் ஆண்டில் ரிம280.17 மில்லியன் ஒதுக்கீடு செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது நடப்பு ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரிம38.4 மில்லியன் அல்லது 12.1 விழுக்காடு குறைவாகும்.
வளர்ச்சித் தேவைகள் தொடர்ந்து சவாலாக இருந்தாலும், மாநிலத்தின் ஆற்றலை வலுப்படுத்தும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மற்றும் பொதுமக்களுக்கு நேரடிப் பயனளிக்கும் மூலோபாயத் திட்டங்களுக்கு மாநில அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என அவர் தெரிவித்தார்.
“அடுத்த ஆண்டு செயல்படுத்துவதற்காக மொத்தம் 514 திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை பொதுக் கட்டமைப்பு வசதிகள், சமூக வசதிகள், விளையாட்டு மேம்பாடு மற்றும் பொருளாதார மூலோபாயத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன.
“குறிப்பாக, மாநிலத்தின் போக்குவரத்து வலையமைப்பு மற்றும் இணைப்புத் திறனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதில் இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் (LRT), விமான நிலைய இணைப்புச் சாலை (Airport Link Road) மற்றும் சிலிக்கான் தீவுக்கான பாதை ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் அடங்கும்.
“அதேவேளையில், கெர்னி பே இரண்டாம் கட்ட மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பினாங்கு போக்குவரத்துப் பெருந்திட்டத்தின் (PTMP) கீழ் இடம்பெறும் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என அவர் விளக்கமளித்தார்.
பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தும் விளக்கமளித்தார்.
இதற்கிடையில், 2025 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கைக்கு, கடந்த ஜூன் 29, 2026 அன்று தேசிய கணக்காய்வாளர் தலைவரிடமிருந்து ஆட்சேபனையற்ற கணக்காய்வு சான்றிதழை பினாங்கு மாநிலம் மீண்டும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சாதனை, மாநிலத்தின் ஒழுங்குமுறையான நிதி நிர்வாகத்தையும், வருவாய் வசூல் மற்றும் நிதி நிலைமை தொடர்ந்து சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதையும் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, மாநில அரசின் வருவாய் வசூல் 2024ஆம் ஆண்டில் ரிம810.46 மில்லியனாக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் ரிம1.26 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது ரிம449.52 மில்லியன் அல்லது 55.46 விழுக்காடு உயர்வாகும்.
“2025ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டம் ரிம366.93 மில்லியன் உபரியைப் பதிவு செய்துள்ளது. இது 2024ஆம் ஆண்டில் பதிவான ரிம174.09 மில்லியன் பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
“இதன் விளைவாக, ஒருங்கிணைந்த வருவாய்க் கணக்கின் (AHD) இருப்பு 2024ஆம் ஆண்டு இறுதியில் ரிம155.94 மில்லியனாக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு இறுதியில் ரிம522.87 மில்லியனாக அதிகரித்துள்ளது.
“மேலும், 2026 அக்டோபர் 30ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தின் ஒருங்கிணைந்த வருவாய்க் கணக்கின் இருப்பு மேலும் அதிகரித்து ரிம651.28 மில்லியனாகப் பதிவாகியுள்ளது,” என்றார்.