ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அனைத்து 28 தமிழ்ப்பள்ளிகளும் எதிர்காலத்தில் தங்களுக்கென சொந்த நில உரிமையைப் பெறுவதை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கான மாநில சிறப்புக் குழுவின் தலைவருமான அவர், மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிலம் பெற்றுத் தரும் பணிகள் தொடர்ந்து செயல்பாடுக் காண்கிறது, என்றார்.
“கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இக்குழுவின் தலைமைத்துவத்தின் கீழ், இதுவரை ஐந்து பள்ளிகளுக்காக ஐந்து நிலங்களைப் பெற்றுள்ளதாகவும், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மேலும் ஐந்து பள்ளிகளுக்கான நிலங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்படுகிறது,” என டத்தோ ஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

“எங்களின் இலக்கு மிகவும் தெளிவானது. முதலில் பினாங்கில் உள்ள அனைத்து 28 தமிழ்ப்பள்ளிகளும் தங்களுக்கென சொந்த நிலத்தைப் பெற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
ஆயிர் ஈத்தாம் பகுதியில் உள்ள இராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புக்கான அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில், துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோவுடன் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இராஜாஜி தமிழ்ப்பள்ளியின் இடமாற்றுத் திட்டத்திற்காக மாநில அரசு அண்மையில் 2.3 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாகவும், புதிய பள்ளிக் கட்டிடம் தனியார் மேம்பாட்டாளர் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) பங்களிப்பின் மூலம் கட்டப்படும் என்றும் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ கூறினார்.
“இதன் மூலம் மாநில அரசுக்கு எந்தவிதமான நிதிச் சுமையும் இல்லாமல் பள்ளிக் கட்டிடத்தை அமைக்க முடியும்,” என்றார்.
பினாங்கில் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டை விரைவுபடுத்தும் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இராஜாஜி பள்ளித் திட்டம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு குறைந்தது மூன்று பள்ளிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சுங்கை பாக்காப் மற்றும் ஜூரு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களும் மீண்டும் தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த முன்னேற்றங்கள் பினாங்கு தமிழ்க்கல்வி வரலாற்றில் முக்கியமான மைல்கல் எனக் குறிப்பிட்ட அவர், சிறப்புக் குழுவின் ஒருங்கிணைப்பின் கீழ் ஒரே நேரத்தில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக இருக்கும். ஒரே ஆண்டில் மூன்று பள்ளிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளை நடத்தப்படுவது மிகப் பெரிய சாதனையாகும்,” என்று டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ கூறினார்.
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக்குழு துணைத் தலைவரும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான குமரன் கிருஷ்ணன் தலைமையில், சுமார் ரிம345,486 மதிப்புள்ள மொத்தம் 2,433 மேசை-நாற்காலி தொகுப்புகள் பினாங்கிலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முதல் கட்ட விநியோகமாக 500 மேசை-நாற்காலி தொகுப்புகள் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த விழாவில், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா பின்தி அப்துல் ரஷீத், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், எம்.பி.பி.பி மாநகர் மேயர் டத்தோ இராஜேந்திரன், இராஜாஜி தமிழ்ப்பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்,டத்தோ டாக்டர் சந்திரம் ராமன், ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர்
ஜோசப் ங் சூன் சியாங் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
“நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கான ஒதுக்கீட்டை இந்த ஆண்டு ரிம50 மில்லியனாக உயர்த்தி, தமிழ்ப்பள்ளி உள்ளிட்ட தாய்மொழிப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான தனது உறுதிப்பாட்டை மடானி அரசாங்கம் மேலும் வலுப்படுத்துகிறது.
“கடந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்காக ரிம20 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
“தற்போது கல்வி அமைச்சு ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படவுள்ள ஒதுக்கீட்டுத் தொகையை இறுதி செய்து வருகிறது. இது குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும்,” என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
இதற்கிடையில், 76 ஆண்டுகள் பழமையான மற்றும் சுமார் 100 மாணவர்களைக் கொண்ட இராஜாஜி தமிழ்ப்பள்ளி, மாணவர்களுக்கு மேலும் வசதியான கற்றல் சூழலை ஏற்படுத்தும் வகையில் பார்லிம் பகுதியில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
புதிய பள்ளிக் கட்டட நிர்மாணிப்புத் திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதிகபட்சமாக 2029 கல்வி ஆண்டுக்குள் புதிய இடத்தில் பள்ளி செயல்படத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு சீன தாய்மொழிப் பள்ளியும் அல்லது தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என கல்வி அமைச்சு மீண்டும் உறுதியளித்துள்ளது.
துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ கூறுகையில், தாய்மொழிப் பள்ளிகள் உட்பட தற்போதுள்ள அனைத்து பள்ளிகளையும் தேசிய கல்வி அமைப்பின் ஒரு பகுதியாக தொடர்ந்து நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
மேலும், மலேசியாவின் கல்வி கட்டமைப்பில் தாய்மொழிப் பள்ளிகள் முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.