பிறை தொகுதியில் எரோப் உரமாக்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறை சட்டமன்ற தொகுதியும் செபெராங் பிறை நகராண்மைக் கழகமும் இணைந்து எரோப் உரமாக்கல் திட்டத்தை (Projek Komposter Aerob MPSP) கடந்த 19/10/2014-ஆம் நாள் தாமான் இண்ராவாசே குடியிருப்புப் பகுதியில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். இந்நிகழ்வில் செபெராங் பிறை நகராண்மைக் கழக மாநகர் இயக்குநர் Ir.ரொஸ்னானி மாமுட், செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான சத்தீஸ் முனியாண்டி மற்றும் டேவிட் மார்ஷல் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

படம் 1: அதிஷ்டக் குழுக்கல் முதல் நிலை வெற்றியாளருடன் செபெராங் பிறை நகராண்மைக் கழக மாநகர இயக்குநர் Ir.ரொஸ்னானி மாமுட், அதன் கழக உறுப்பினர்களான சத்தீஸ் முனியாண்டி மற்றும் டேவிட் மார்ஷல் மற்றும் பிறை சமூக பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஶ்ரீ சங்கர்.
படம் 1: அதிஷ்டக் குழுக்கல் முதல் நிலை வெற்றியாளருடன் செபெராங் பிறை நகராண்மைக் கழக மாநகர இயக்குநர் Ir.ரொஸ்னானி மாமுட், அதன் கழக உறுப்பினர்களான சத்தீஸ் முனியாண்டி மற்றும் டேவிட் மார்ஷல் மற்றும் பிறை சமூக பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஶ்ரீ சங்கர்.

எரோப் உரமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றிய பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் இதனை ஒரு சிறந்த திட்டம் என வர்ணித்தார். பினாங்கு மாநிலம் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டிருப்பது இத்திட்டத்தின் வழி புலப்படுகிறது. எரோப் உரமாக்கல் திட்டத்தின் முக்கிய நோக்கமானது கழிவு பொருட்களின் எண்ணிக்கையைக் குறைத்து அதனை உரமாக்குவதாகும். இம்மாதிரியானத் திட்டத்தின் வழி, புவி வெப்பமடைதலை குறைக்க முடியும் என்பதை தமது உரையில் சுட்டிக்காட்டினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் .
மேலும், இத்திட்டம் தற்போதைக்கு வீடுகளிலிருந்து துவக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு 149 தொட்டிகள் செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான சத்தீஸ் மற்றும் டேவிட் மார்ஷல் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து பிறையில் உள்ள ஒவ்வொரு வீடமைப்பு பகுதிக்கும் தலா ஒரு தொட்டி வழங்கப்பட்டன. வீட்டில் இருக்கும் உணவு கழிவு பொருட்கள், புல், செடி கொடி வகைகளைச் சேகரித்து அதனை இத்தொட்டியில் பொதுமக்கள் போட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க இத்திட்டம் பெரிதும் துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வை மேலும் மெருகூட்டும் வகையில் பதிவு செய்த வீடமைப்பு குடிமக்கள் அதிஷ்ட குழுக்கிலும் கலந்து கொண்டனர்.