புக்கிட் கெடொங் உணவு மையம் புது தோற்றம் கண்டது

மலேசியாவில் மட்டுமன்றி ஆசியாவிலேயே உணவுக்குப் புகழ்பெற்ற தளமாகப் பினாங்கு மாநிலம் திகழ்ந்து வருகிறது. உள்நாட்டு மக்கள் உட்பட வெளிநாட்டினரும் நம் மாநிலத்திற்கு உணவுக்காகவே அதிகமாகப் படையெடுத்து வருகின்றனர்.  இம்மக்களின் உணவுத் தேவையைச் சரியாக நிறைவு செய்யும் வகையில் மாநில அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், புக்கிட் கெடோங் வட்டாரத்தில் அமைந்துள்ள உணவு மையம் ஒன்று தரமேம்பாடு கண்டு கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்களால்  அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.

485494_501019979928108_481760180_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இத்தர மேம்பாட்டுப் பணி சுமார் ரி.ம 1.5 கோடி பொருட்செலவில் செப்டம்பர் 4ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. புதிய தோற்றம் கண்டுள்ள இவ்வுணவு மையத்தில் 37 உணவுக் கடைகளும் 8 பானக் கடைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தர மேம்பாடு கண்ட பின்னும் இவ்வுணவு மையத்தின் மாதாந்திர வாடகைக் கட்டணம் முன்புபோல் 68 ரிங்கிட்டிலேயே  நிலைநிறுத்தப்பட்டிருப்பது அந்த உணவு மையத்தின் வியாபாரிகளுக்கு பெருமகிழ்வைத் தந்தது.

பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு மக்கள் கூட்டணி அரசு  நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும்  மூலதனமாக விளங்கும் சிறு வியாபாரிகளின் நலனைப் பேணுவதில் என்றும் மும்முரம் காட்டும் என முதல்வர் தம் உரையில் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் துணையாக இருக்கும் வகையில் வியாபாரிகள் தங்கள் உணவு மையத்தின் தூய்மையையும் அழகையும் பேணிக் காக்க வேண்டியது அவசியம். அதோடு மக்களுக்கு நியாயமான விலையில் தரமான உணவுப் பதார்த்தங்களைத் தயார் செய்வதில் வியாபாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், நெகிழி மற்றும் பொலிஸ்திரின் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தூய்மையான பசுமையான பினாங்கு என்ற கொள்கையின் அடிப்படையில் பினாங்கு மாநிலத்தை அனைத்துலக உயர்தர நகரமாக உருமாற்ற முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இத்திறப்பு விழாவில் பினாங்கு முதல்வர் உட்பட, பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர்களான திரு சாவ் கொன் யாவ், டத்தோ அப்துல் மாலிக்,  திரு சிம் சி சின், பினாங்கு நகராண்மைக் கழக தலைவர் டத்தோ ஹஜ்ஜா பத்தாயா, புக்கிட் கெடொங் உணவு மைய வியாபாரிகள், ஊடகத் துறையினர், பொது மக்கள் யாவரும் கலந்து சிறப்பித்தனர்.