பெண்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்- குமரேசன்

Admin

பத்து உபான் – அனைத்துலக மகளிர் தினம் மார்ச்,8 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தன்று
வீட்டிலிருக்கும் தாய்மார்கள் முதல் வணிகத் துறையில் வெற்றி நடைப்போடும் தலைவர்கள் வரை அனைவரின் சமத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

எனவே, பத்து உபான் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் அவ்வட்டாரத்தில் வாழும் மகளிர்களை அங்கீகரிக்கும் பொருட்டு இலவசமாக சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற 150 மகளிர்களுக்கு இச்சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டன.

“இத்திட்டம் விரைவில் கொண்டாடவிருக்கும் அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு  சமூகத்தில் பெண்களுக்கு நன்றியும் பாராட்டும் வெளிப்படுத்த வேண்டும்,” என இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

“நம் நாட்டில் உள்ள மாநில சட்டமன்றங்களில் 30 விழுக்காடு பெண்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட முதல் மாநிலம் பினாங்கு ஆகும். அதே நிலைப்பாட்டில் பத்து உபான் சட்டமன்றத்தின் கீழ் செயல்படும் கம்போங் நிர்வாக செயல்முறை கழக (எம்.பி.கே.கே) தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு 30 விழுக்காடு பெண்கள் பிரதிநிதிகளை நியமித்துள்ளேன்,” என குமரேசன் விளக்கமளித்தார்.

பினாங்கு மாநில அரசு கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் இம்மாநிலத்தில் பெண்களின் பங்களிப்புக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பதை அறிய முடிகிறது. இதற்காக, பினாங்கு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் முயற்சிகளைப் பாராட்டுவதாகக் கூறினார்.

இச்செய்தியாளர்  சந்திப்பின் போது பி.டபிள்யூ.டி.சி தலைமை நிர்வாக அதிகாரி ஓங் பீ லெங், பத்து உபான் ஜெ.பி.டபிள்யூ.கே லீ கா லிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பினாங்கு ‘Relanita’  மூலம் பெண்கள்  சமூகப் பணிகளில் பங்கேற்க முடியும். இம்முயற்சி,  அவர்களுக்கு தன்னார்வத் தொண்டு செய்வதற்கும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதன்மூலம், பினாங்கில் உள்ள அனைத்து 40 தொகுதிகளிலும் உள்ள  பெண்கள்  நேரடியாக மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவுடன் இணைந்து சேவை வழங்க முடியும். இன்று  இத்திட்டத்தின் கீழ் சுமார் 60 பெண்கள் பதிந்து கொண்டனர்