பெருநிறுவனம் & அரசு சாரா இயக்கங்கள் பி.கே.பி-ல் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவ முன் வர வேண்டும் – தர்மன்

Admin

பாயான் லெப்பாஸ் – மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை, சமூகநல பிரிவின் ஏற்பாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 3.0-ல் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

பாயான் லெப்பாஸ் பகுதியில் வாழும் ஏறக்குறைய 35 குடும்பங்களுக்கு தலா ரிம100 மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கபட்டன. 

கடந்த ஜூன்,10-ஆம் தேதி உள்நாட்டு நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட உணவுப் பற்றாக்குறை செய்தியை தொடர்ந்து  புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை, சமூகநல பிரிவின் அதிரடி நடவடிக்கையாக இந்த உணவுப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

“இந்த நன்கொடையை தென்மேற்கு சமூகநலத் துறை மற்றும் பொதுப் பாதுகாப்பு படை தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டு தேர்தெடுக்கப்பட்ட 35 வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு பகிந்தளிக்கப்படும்,” என மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டார பேரவையின் தலைவர் விவேக நாயகன் தர்மன் கூறினார். 

பி.கே.பி 3.0 அமலாக்கத்தால் பாதிக்கப்பட்ட வசதிக் குறைந்த பொது மக்களுக்கு உதவ பெருநிறுவனங்கள் சமூக பெருநிறுவன திட்டம் (சி.எஸ்.ஆர்) கீழ் செயல்பட முன் வர வேண்டும். அதுமட்டுமின்றி அரசு சாரா இயக்கங்களும் தங்களால் இயன்ற உதவிகள் வழங்க  வேண்டும், என மேலும் வலியுறுத்தினார். 

இந்த நன்கொடை வழங்க ஆதரவளித்த பாயான் லெப்பாஸ், இந்து இளைஞர் அமைப்பின் தலைவர் விஸ்வநாதன்; தஞ்சோங் பினாங்கு, தெஸ்கோ; முத்தியாரா உணவு வங்கி; தென்மேற்கு மாவட்ட சமூகநலத் துறை;  மலேசிய பொதுப் பாதுகாப்பு படை ஆகிய அனைவருக்கும் நன்றியைக் கூற கடமைப்பட்டுள்ளதாக,  தர்மன் தெரிவித்தார். 

பி.கே.பி-ல் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இந்த சிறிய உதவி அவர்களின் சுமையைக் குறைக்க துணைபுரிகிறது.

மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை தொடர்ந்து பொது மக்களின் சமூகநலன் பாதுகாக்க பல திட்டங்கள் செயல்படுத்தும்  என முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் தர்மன் இவ்வாறு கூறினார்.